வெற்று வாக்குறுதிகளில் காங்கிரஸூக்கு நம்பிக்கையில்லை: ராகுல் காந்தி

""வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது; மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும்
வெற்று வாக்குறுதிகளில் காங்கிரஸூக்கு நம்பிக்கையில்லை: ராகுல் காந்தி

""வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது; மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பிகார் மாநிலம், சுபௌல் பகுதியில் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
நாட்டு மக்களின் காவலாளியாக இருப்பேன் என்று கூறி வாக்கு கேட்கும் பிரதமர் மோடி, அனில் அம்பானி போன்றவர்களுக்குதான் காவலாளியாக இருக்கிறார். எனவே, காவலாளியை, அவரது பொறுப்புகளில் இருந்து விடுவிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையாக உள்ளது. 
அண்மைக் காலமாக, பிரதமர் மோடியின் முகத்தில் ஒரு வித பயம் நிலவுவதை காண முடிகிறது. அது தேர்தல் தோல்வி பயமாகும். ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றால், அனில் அம்பானி போன்றவர்களுடன் மோடியும் சிறையில் இருப்பார்.
பிகார் மாநிலத்துக்கு, பாஜக தலைமையிலான மத்திய அரசைவிட, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் அதிகம் செய்திருக்கிறது. கடந்த 2008-ஆம் ஆண்டில் கோசி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, ரூ.100 கோடிக்கும் அதிகமாக நிதியுதவியை அப்போதைய காங்கிரஸ் அரசு வழங்கியது. அதேசமயம், கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது, 5 ரூபாய் கூட மத்திய பாஜக அரசு அளிக்கவில்லை.
மோடி அரசு செய்த அநியாயங்களை, எங்களது "நியாய்' திட்டத்தின் மூலம் சரிசெய்வோம். வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றினோம். மத்தியில் அடுத்த காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார் ராகுல்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"பொருளாதாரம் உத்வேகம் பெறும்': இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது:
5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கும் நியாய் திட்டத்தால், நாட்டின் பொருளாதாரம் உத்வேகம் பெறும். இத்திட்டத்தின் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை ஏழை மக்களால் வாங்க முடியும். இதனால், இந்திய உற்பத்தி துறை புத்துயிர் பெறும். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், ஏழை குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.72,000 செலுத்தப்படும். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் வறுமை மீது துல்லிய தாக்குதல் நடத்தி, அதனை ஒழிப்போம் என்றார் ராகுல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com