சர்ச்சை நாயகி சாத்வி பிரக்யா சிங் தாக்குர் வேட்புமனுத் தாக்கல்!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகுர் இன்று (திங்கள்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
சர்ச்சை நாயகி சாத்வி பிரக்யா சிங் தாக்குர் வேட்புமனுத் தாக்கல்!


மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகுர் இன்று (திங்கள்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதிக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். 

இதனிடையே, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்குர் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராகவும் அவர் பாஜகவால் அறிவிக்கப்பட்டார்.   

முதல் சர்ச்சை:

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், என்னை துன்புறுத்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால் தான் மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார் என்று பிரக்யா சிங் தாக்குர் பேசினார். இவருடைய இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பாஜக இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தது. 

இதையடுத்து, இந்த சர்ச்சை கருத்து குறித்து விளக்கம் கேட்டு பிரக்யா சிங் தாக்குருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார். 

இதைத்தொடர்ந்து பிரக்யா சிங் தாக்குர், கர்கரே குறித்து நான் பேசிய கருத்து எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் நான் அதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன், அதற்காக மன்னிப்பும் கோருகிறேன் என்றார். 

2-ஆவது சர்ச்சை:

கடந்த சனிக்கிழமை அவர் இந்தியா டுடே சேனலில் பேசும் போது, "அயோத்தியில் மாபெரும் ராமர் கோயில் கட்டப்படவேண்டும். அங்கு அதற்கு முன்பு இருந்த நினைவுச் சின்னத்தை அழிக்க நானும் சென்றிருந்தேன். அதன் உச்சியில் மேல் ஏறி உடைத்தெறிந்தேன். அதுகுறித்து மிகுந்த பெருமையடைகிறேன்" என்றார். 

அவருடைய இந்த சர்ச்சை கருத்துக்கு தேர்தல் அதிகாரி சுதம் காதே மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்யா சிங் தாக்குர், "எனது பேச்சில் மாற்றமில்லை. ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். கோயில் கட்ட விடாமல் யாரும் என்னை தடுக்க முடியாது" என்றார். 

இப்படி அடுத்தடுத்து சர்ச்சை கருத்துகளாக பேசி வந்த சாத்வி பிரக்யா சிங் தாக்குர் இன்று (திங்கள்கிழமை) தனது ஆதரவாளர்கள் 3 பேர் மற்றும் வழக்கறிஞருடன் சென்று போபால் மக்களவைத் தொகுதிக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com