பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தது பாஜக: பிரதமர் மோடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகக் கடும் நடவடிக்கைகளை எடுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி. உடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், நந்துர்பர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி. உடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், நந்துர்பர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகக் கடும் நடவடிக்கைகளை எடுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கோழைத்தனமாக இருந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
பாஜக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் பயங்கரவாதம் பெரிதும் குறைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டுமே பயங்கரவாத நடவடிக்கைகள் காணப்படுகின்றன. பாஜக தலைமையிலான ஆட்சியில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி அதிகரித்தது.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் நிலைமை என்ன? நாட்டின் மூலை முடுக்கெங்கும் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மும்பை, புணே, ஹைதராபாத், காசி (வாராணசி), அயோத்தி, ஜம்மு என எந்த இடமும் தப்பவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, தாக்குதலுக்காக என்ன செய்தது? பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்தியது; வருத்தம் தெரிவித்தது; பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது.
மோடியிடம் இருந்து தப்ப முடியாது: ஆனால், உங்களுடைய காவலரின் (பிரதமர் மோடி) அரசு என்ன செய்தது? காங்கிரஸ் கூட்டணியின் கோழைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாத அமைப்புகளின் கூடாரத்துக்குள் புகுந்த பாதுகாப்புப் படையினர், எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல், அவர்களை துவம்சம் செய்தனர். உலகின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், மோடியிடம் இருந்து தப்ப முடியாது என்பது அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தெரியும். 
நான் பயங்கரவாதம் குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் பேசுவது சிலருக்கு (காங்கிரஸ் தலைவர்கள்) நெருடலாக இருக்கும். அண்மையில் நடைபெற்ற மக்களவைக்கான இரண்டுகட்ட தேர்தல்களிலும் பாஜகவின் கையே ஓங்கியிருந்தது என்பதை அறிந்து, எதிர்க்கட்சிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளன.
மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை சேமித்து வைப்பதற்காகக் கூடுதல் கிடங்குகள் அமைக்கவும், வெங்காயத்தை மற்ற ஊர்களுக்கு அனுப்புவதற்கான வரியைக் குறைக்கவும் பாஜக முயன்று வருகிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு, இடைத்தரகர்கள் பயன்பெறுவதற்காகப் பயிர்களின் விலையை உயர்த்தியது. இடைத்தரகர்களுக்கு எதிராக நான் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறேன். அவர்களின் அதிகாரத்தை ஒழிக்க பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: மத்திய அரசின் விவசாயத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள சுமார் 1.25 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிலம் வைத்திருப்பதற்கான உச்ச வரம்பு (5 ஏக்கர்) நீக்கப்படும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, எத்தனால் தயாரிக்கலாம். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலேயே அந்த அரசு முழு கவனத்தையும் செலுத்தியது. உள்நாட்டிலேயே எத்தனால் தயாரிக்கப்பட்டால், அவர்களின் வருமானம் குறைந்துவிடுமோ என்று காங்கிரஸ் அஞ்சியது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த ஊழல்கள் குறித்து நான் பேசி வருவதால், அவர்கள் என்னை விமர்சிக்கின்றனர்.
இடஒதுக்கீட்டுக்குப் பாதிப்பில்லை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இடஒதுக்கீடு முறை அழிந்துவிடும் என்று காங்கிரஸ் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அம்பேத்கர் வழங்கிய இடஒதுக்கீட்டு முறைக்கு, மோடி இருக்கும்வரை எந்த பாதிப்பும் நேராது. பழங்குடியினர் வசித்து வரும் இடத்திலிருந்து வெளியேற்றப்படாத வகையில், பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும். அவர்களின் விவசாய நிலங்கள் காக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நேர்மையான ஆட்சி: ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டில் நேர்மையான முறையில் ஆட்சி நடத்த முடியும் என்பதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிரூபித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு, பெரும் பணக்காரர்களுக்கு அதிகளவில் கடன்களை வழங்க வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், பாஜக அரசு ஏழைகளுக்கும், பழங்குடியினருக்கும், முத்ரா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கும் கடன் அளித்தது. வங்கிகளில் கடன் பெற்ற நபர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றால், அவர்களே தாமாகத் திரும்பி வர வேண்டும் அல்லது கிறிஸ்டியன் மிஷெலைப் போல் அவர்களும் நாடு கடத்தப்படுவர். வங்கிகளில் பெற்ற கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது என்றார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் அண்மையில் நாடு கடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com