ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:  ஈரான் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை அமலில் உள்ளது. இதையடுத்து, அந்த நாட்டிலிருந்து கச்சா இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. 
இருப்பினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 6 மாத காலத்துக்கு மட்டும் இந்த தடையிலிருந்து விலக்களிக்க அமெரிக்கா முடிவெடுத்து அதனை செயல்படுத்தியது.  அமெரிக்கா கொடுத்த காலக்கெடு மே 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், காலக்கெடுவை மேலும் நீட்டிப்பது தொடர்பாக  அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தும் என தெரிகிறது. இருப்பினும், ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நாம் எதிர்பார்க்க முடியாது. ஈரானின் கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும் நிலையில், சவூதி அரேபியா உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு தேவை சமாளிக்கப்படும் என்றார் அவர்.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்வதில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும் நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மெக்ஸிகோ நாடுகளிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட சுட்டுரை செய்தியில், " இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் ஒரு வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏற்படும் தேவையை நிறைவேற்றும் விதத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
சீனா எச்சரிக்கை: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது மத்தியகிழக்கு நாடுகளில் கொந்தளிப்பை தீவிரமாக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்கத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் செயல்படுத்தப்படுவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இந்த விஷயத்தில்,அந்த நாடு தனது அதிகார எல்லை வரம்பை மீறி செயல்படுகிறது. ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது மத்தியகிழக்கு நாடுகளில் தீவிர கொந்தளிப்பை உருவாக்கும். அத்துடன் சர்வதேச எரிசக்தி சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com