ஒரு ஹிந்து என்றும் பயங்கரவாதியாக மாட்டான்: அமித் ஷா

ஒரு ஹிந்து என்றும் பயங்கரவாதியாக மாட்டான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செவ்வாய்கிழமை கூறினார். 
ஒரு ஹிந்து என்றும் பயங்கரவாதியாக மாட்டான்: அமித் ஷா

ஒரு ஹிந்து என்றும் பயங்கரவாதியாக மாட்டான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செவ்வாய்கிழமை கூறினார். இதுதொடர்பாக போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

ஒரு ஹிந்து என்றும் பயங்கரவாதியாக மாட்டான். ஹிந்து கலாசாரம் யாரையும், என்றும் துன்புறுத்தியது கிடையாது. ஆனால், காங்கிரஸ் தான் ஹிந்துக்களுக்கு பயங்கரவாதி பட்டம் சூட்டியுள்ளது. அதை எதிர்த்து நடத்தப்படும் சத்தியாகிரக போராட்டம் தான் போபாலில் சாத்வி பிரக்யா தாகூரின் அரசியல் பிரவேசம். ஹிந்து தீவிரவாதிகள் என்ற திக்விஜய் சிங் கருத்துக்கு மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

வாக்கு வங்கி அரசியல் தான் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் முக்கியம். ஆனால், மக்களின் பாதுகாப்பு தான் பாஜக-வுக்கு முக்கியம். ஒமர் அப்துல்லாவின் தனிநாடு பிரகடணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுலின் கருத்து என்னவென்று நான் எழுப்பிய கேள்விக்கு 12 நாட்களாகியும் பதிலில்லை. அப்படியென்றால் அவருடைய கருத்தை ராகுல் ஏற்கிறார் என்று தான் அர்த்மாகும். 

கடந்த 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாதிக்காததை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மோடியின் அரசு சாதித்துள்ளது. பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற தகுதியுடைய விவசாயிகளின் பட்டியலை மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே வழங்காமல் உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு விவசாயிகளின் நலனை விட மோடி அரசுக்கு ஆதரவு பெருகிவிடும் என்ற அச்சமும், வாக்குவங்கி அரசியலும் தான் முக்கிய காரணம் என்றார்.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா பதிலளிக்கையில்,

பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி அங்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முன்பாக ஏப்ரல் 25-ஆம் தேதி அந்த தொகுதி முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த அரசியல் தலைவர்களான சுக்பீர் சிங் பாதல், நிதீஷ் குமார், உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் முன்னிலையில், பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

என்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில் சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே காங்கிரஸ் தலைவர் ராகுலின் சட்ட அறிவு குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

நமது நாடு ஜனநாயக நாடாகும். எனவே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனவே பிரியங்கா வதேரா விவகாரத்தில் காங்கிரஸ் தான் குழப்பத்தில் உள்ளது. இதில் பாஜக மிகத் தெளிவாகவே செயல்பட்டு வருகிறது. வாராணசியில் எங்கள் கட்சி வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். ஆகையால் திட்டமிட்டபடி வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com