கேஜரிவாலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறுத்திவைப்பு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தில்லி நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
கேஜரிவாலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறுத்திவைப்பு


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தில்லி நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.   

அவதூறு வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி முன்னாள் தலைவரும், ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவருமான யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை, தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

 இந்த வழக்கில், மேற்கண்ட மூவரும் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சமர் விஷால் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை நிறுத்திவைக்குமாறு கோரினர். 

இதையடுத்து, அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை நிறுத்திவைத்து நீதிபதி சமர் விஷால் உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான பிரதான வழக்கை ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.   

முன்னதாக, சுரேந்தர் குமார் சர்மா என்ற வழக்குரைஞர், கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2013-இல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். 

அதில், தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்புத் தருவதாக கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் என்னை அணுகினர். மேலும், எனக்கு வாய்ப்பளிக்க ஆம் ஆத்மி தலைமை முடிவு செய்திருப்பதாக சிசோடியாவும், யாதவும் கூறியதைத் தொடர்ந்து, நான் விருப்ப மனுவை பூர்த்தி செய்து அளித்தேன்.

ஆனால், எனக்கு வாய்ப்பளிக்காததுடன், என்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கேஜரிவால் உள்ளிட்டோர் விமர்சித்தனர்' என்று தெரிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com