ஒரே ஆண்டில் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை: ராகுல் வாக்குறுதி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஓர் ஆண்டில் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஓர் ஆண்டில் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பினேஸ்வர் தாம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. அதிலும், பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் பாஜகவினர் அநியாயம் இழைத்துள்ளனர். அதனால் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் வெறும் 15-20 தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தினார்.
கடந்த 5 ஆண்டுகளில், ஏழைகள், பழங்குடியினர் உள்பட அனைவருக்கும் பாஜக அநியாயம் இழைத்தது. உங்களிடம் இருந்து சுரண்டப்பட்டதை விட அதிகமாக உங்களுக்கு வழங்க காங்கிரஸ் உறுதி கொண்டுள்ளது.
துல்லியத் தாக்குதல் குறித்து பாஜகவினர் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் வறுமைக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தவிருக்கிறோம். கடந்த தேர்தலின்போது,  2 கோடி வேலைவாய்ப்பு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் என்று வாயில் வந்ததெல்லாம் வாக்குறுதியாக மோடி கூறினார். ஆனால் குறைந்தபட்ச வருமானம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நான் உண்மையை மட்டுமே பேச விரும்புகிறேன்.  அடுத்த ஒரே ஆண்டில் நிச்சயம் 22 லட்சம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும். பஞ்சாயத்து அளவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மக்களின் வரிப்பணத்தை அனில் அம்பானி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கில் மோடி செலுத்தினார். அதையெடுத்து மக்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய நான் நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72, 000 வழங்க பணம் எங்கிருந்து வரும்? என்று மோடி கேள்வி எழுப்புகிறார். அனில் அம்பானியிடம் இருந்து பெறப்படும் என்று நான் அதற்கு பதிலளிக்க விரும்புகிறேன். 
கடன் கட்டாத ஏழை விவசாயிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்படும். கடனை கட்ட இயலாத விவசாயிகள் சிறைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை உடனடியாக காங்கிரஸ் நிறைவேற்றியது என்றார் ராகுல் காந்தி. 
நியாயம் கேட்டு இளைஞர்கள் வாக்குப்பதிவு: மக்களவைத் தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், "நியாயத்தை வேண்டி லட்சக்கணக்கான இளைஞர்கள் வாக்களித்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " ஒவ்வொரு இந்தியரும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி வாக்களிக்க செல்கின்றனர். இந்த முறை லட்சக்கணக்கான இளைஞர்கள் வாக்களிக்க சென்றுள்ளனர். அவர்களில் முதல்முறை வாக்காளர்களே அதிகம். அவர்கள் நிச்சயம் சிந்தித்து வாக்களித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com