வாராணசியில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யானது!

வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போயுள்ளது. 
வாராணசியில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யானது!


வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போயுள்ளது. 

வாராணசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிடுவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் 2014ம் ஆண்டு வாராணசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி விரும்பினால் உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் (பிரதமர் மோடியின் தொகுதி) போட்டியிடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சித் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா கூறியிருந்த நிலையில், அவர் போட்டியிடவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறும் மே 19-ஆம் தேதி வாராணசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதியில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாராணசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து நான் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளேன். கட்சி விரும்பினால் அந்தத் தொகுதியில் களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். இப்போதைய மத்திய அரசில் மக்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்' என்றார்.

இதன் பிறகு ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு, "காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேட்டுக் கொண்டால், வாராணசி தொகுதியில் மிகவும் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்" என்று பிரியங்கா பதிலளித்திருந்ததால், காங்கிரஸ் கட்சியினருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com