ரஞ்சன் கோகோய்க்கு எதிரான வழக்கில் இருந்து விலகுகிறேன்: ஏன் என்றால்.. நீதிபதி ரமணா கடிதம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
ரஞ்சன் கோகோய்க்கு எதிரான வழக்கில் இருந்து விலகுகிறேன்: ஏன் என்றால்.. நீதிபதி ரமணா கடிதம்


புது தில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான மூவர் அமர்வில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தான் நெருங்கிய நண்பர் என்பதால், இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்பதால், விசாரணைக் குழுவில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு ரமணா கடிதம் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்து மூத்த நீதிபதியாக திகழ்பவர் எஸ்.ஏ. போப்டே. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் குறித்து போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு போப்டே அளித்த பேட்டி வருமாறு: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்னை நியமித்துள்ளார். நானும், உச்சநீதிமன்றத்தில் எனக்கு அடுத்து மூத்த நீதிபதியாக விளங்கும் என்.வி.  ரமணா, பெண் நீதிபதியான இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவை விசாரணைக்கு ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன். தலைமை நீதிபதிக்கு எதிராக புகார்கள் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிய பெண்ணுக்கு ஏற்கெனவே நான் நோட்டீஸ் அனுப்பி விட்டேன்.

இந்த விவகாரம் குறித்த முதல் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த விசாரணையானது, வழக்கமான விசாரணை போல இருக்காது. இருதரப்பு சார்பாக வழக்குரைஞர்கள் யாரும் வாதிட மாட்டார்கள். பிரத்யேக அறையிலேயே விசாரணை நடத்தப்படும். விசாரணையை முடிப்பதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கவில்லை. விசாரணையின் முடிவில் தெரிய வரும் உண்மையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்.ஏ. போப்டே.

முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார். இந்தக் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மறுத்திருந்தார். மேலும், தலைமை நீதிபதியின் அலுவலகத்தை மிகப்பெரிய சக்திகள் முடக்க விரும்புவதாகவும், அந்த சக்திகளே, இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நாளை தொடங்க இருந்த விசாரணை, நீதிபதி ரமணாவின் விலகலால் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com