எதிர்க்கட்சியிலும் எனக்கு நண்பர்கள் உண்டு: மோடி ருசிகர பேட்டி..

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், நாடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் அரசியல் பிரமுகரே பம்பரமாகச் சுற்றி வரும் வேளையில், பிரதமரை கேட்கவா வேண்டும்.
எதிர்க்கட்சியிலும் எனக்கு நண்பர்கள் உண்டு: மோடி ருசிகர பேட்டி..


மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், நாடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளூர் அரசியல் பிரமுகரே பம்பரமாகச் சுற்றி வரும் வேளையில், பிரதமரை கேட்கவா வேண்டும். காலையில் ஒரு மாநிலம், மதியம் மற்றொரு மாநிலம், மாலையில்  இன்னொரு மாநிலம் என்று சூறாவளியாகச் சுழன்று பிரசாரம் செய்து வருகிறார். இந்த நெருக்கடியான நேரத்திலும் தன்னைச் சந்தித்த நடிகர் அக்ஷய் குமாருக்கு முற்றிலும் அரசியல் கலப்பில்லாத பேட்டியைக் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் பேட்டியில், மக்களவைத் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும்? கூட்டணி ஆட்சி அமைய நேரிட்டால் யாரிடம் பாஜக ஆதரவு கோரும்? என்ற வழக்கமான கேள்விகள்  இல்லை.

அவர் என்ன விரும்பி சாப்பிடுகிறார்? எதிர்க்கட்சிகளில் அவருடைய அபிமான நண்பர் யார்? உறக்கத்தை எப்படி சமாளிக்கிறார்? ஊதியத்தை வீட்டுக்கு கொடுக்கிறீர்களா? போன்ற  பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்கு தனது நினைவுகளை அசைபோட்டபடியே பதிலளித்துள்ளார் மோடி. அவரது பேட்டி...

மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவீர்களாமே?

சிறுவயதில் மாம்பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இருப்பினும் தற்போது சிறு துண்டுகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டின் பிரதமராவோம் என்று எப்போதாவது நினைத் ததுண்டா?

ஒருபோதும் அப்படி நினைத்தது கிடையாது. சந்நியாசியாகி விடலாம் அல்லது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்ததுண்டு. 
அரசியல் பின்னணி இல்லாத எளிய குடும்பத்தில் இருந்து வந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்கிறேன். இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. சிறுவயதில் எந்த வழிகாட்டுதல்களும் எனக்கு கிடைக்கவில்லை. நான் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றிருந்தால் என் அம்மா மட்டும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

எப்போதாவது கோபப்பட்டதுண்டா?

கோபப்படுவது மனித இயல்புதானே. இருந்தாலும், எனது கோபத்தை வெளிப்படுத்த ஒருபோதும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நீங்கள் கண்டிப்பான பிரதமரா? 

நான் ஒழுக்கமான நபர்; ஆனால் கண்டிப்பான தலைவர் கிடையாது. யாரையும் கண்டிப்பது எனக்கு பிடிக்காது. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, பிரச்னையை புரியவைத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்களிடம் இருந்து இன்னும் அதிகம் கற்றுக் கொள்வேன்.

குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பியதுண்டா?

சிறு வயதிலேயே குடும்பத்தினரை பிரிந்து வந்து விட்டேன். முற்றிலும் வேறுபட்ட வழிகளில் எனக்குப் பயிற்சிகள் கிடைத்தன. இருப்பினும், பிரதமர் என்பதற்காக, எனது வீட்டை விட்டுவிட முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான நட்பு பற்றி?

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர், எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம்நபி ஆஸாத் என் நெருங்கிய நண்பர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பெங்காலி இனிப்புகளை அனுப்புவார். ஆண்டுதோறும் குர்தா அனுப்ப அவர் தவறுவதில்லை. 

உங்கள் ஓய்வுகால திட்டம் என்ன?

இந்த கேள்வியை எனது அமைச்சரவை சகாக்களும் கேட்டிருக்கிறார்கள். எப்போதும் எனக்கு பொறுப்புகள் இருப்பதாகவே வாழ்க்கையைப் பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்துக்கு நீங்கள் கொண்டு வந்த மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்ன?

நான் நீண்ட காலம், குஜராத் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறேன். அப்போது கிடைத்த அனுபவத்தைத்தான் நான் பிரதமர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தேன். 

ஒருவர் தினமும் 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால், நீங்கள் தினமும் மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறீர்கள்? இது போதவில்லை என்று உணர்கிறீர்களா?  எப்படி சமாளிக்கிறீர்கள்?

இதே கேள்வியை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட எனது நண்பர்கள் அனைவரும் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா என்னைச் சந்தித்த இரண்டு முறையும் கேட்டார். பல ஆண்டுகளாக குறைவான நேரம் தூங்கியே எனக்குப் பழகிவிட்டது. அதனால், எனக்கு அதிக நேரம் தூங்க வேண்டும் என்று தோன்றவில்லை. பிற்காலத்தில் அதிக நேரம் தூங்கப் பழக வேண்டும் என்று விரும்புகிறேன்.

சளி பிடித்தால் என்ன செய்வீர்கள்?

முக்கிய நிகழ்வுகளில் உரையாற்ற வேண்டிய நேரத்தில் சளி பிடித்திருந்தால் கஷ்டமாக இருக்கும். இருப்பினும், அதற்கு மருந்து எதுவும் நான் சாப்பிடுவதில்லை. வேறு வழிகளில் அதை சரிசெய்து விடுவேன். அவற்றில் ஒன்று மசாஜ் செய்வது.

சிறுவயது வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்?

சிறு வயதில் ஏழ்மையின் பிடியில் இருந்தேன். அணிந்து கொள்வதற்கு ஷூ கிடையாது. எனது தாய்மாமா வெள்ளை நிற ஷூக்களை வாங்கித் தந்தார். அது, வெண்ணிறமாக இருந்ததால், சீக்கிரமாக அழுக்காகி விடும். அதை பாலீஷ் போட பணமிருக்காது. பள்ளி முடிந்த பிறகு காத்திருந்து, ஷூ பாலிஷ் போடுவதற்காக உடைந்த சாக்பீஸ் துண்டுகளை எடுத்து வருவேன்.

சமூக ஊடகங்களில் உங்களைப் பற்றி வெளிவரும் மீம்ஸ் பற்றி சொல்லுங்கள்?

உலகில் என்ன நடக்கிறது என்று என்பதை தெரிந்து கொள்வதற்கு அதுவும் ஒரு வழியாக இருக்கிறது.

உங்கள் ஊதியத்தை வீட்டுக்கு அனுப்புகிறீர்களா?

எனக்கு எப்போதும் எனது தாயார் பணம் கொடுத்து வருகிறார். அதனால், நான் எதுவும் வீட்டுக்கு அனுப்பியதில்லை. அதனால், அவர் மீது எனக்கு பாசமோ, அக்கறையோ இல்லை என்று அர்த்தமில்லை. ஏனெனில் அவருக்கு எதுவும் தேவைப்பட்டதில்லை. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது கூட எனது குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பதற்கு அரசை சார்ந்து இருந்து கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com