பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் வித்தியாசமில்லை: அகிலேஷ் யாதவ்

அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் வித்தியாசமில்லை: அகிலேஷ் யாதவ்

அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து சமாஜவாதி கட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸூடன் கூட்டணி அமைக்காமல், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. எனினும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் ரே பரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி ஆகிய தொகுதிகளில் இந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்நிலையில், கான்பூரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
இதற்கு முன்பு காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்தோம். ஆனால், அக்கட்சியோ மிகுந்த அகந்தைப்போக்குடன் இருப்பதை பின்னர் கண்டறிந்தோம். பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் கட்சி தடுக்கவில்லை. ஆனால், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிதான், பாஜகவைத் தடுத்து வருகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எனது தந்தையும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் மீது சொத்து குவிப்புப் பதிவு செய்து, சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. அதை காங்கிரஸ் கட்சி இப்போதும் செய்து வருகிறது. (இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் புதிய மனுவொன்றை தாக்கல் செய்ததைக் குறிப்பிடுகிறார்). பாஜகவைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், நாங்கள் அச்சுறுத்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை.
புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை வாபஸ் செய்த பாஜக அரசுக்கு, தேர்தலில் வாக்குகள் மூலம் பொதுமக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் கடைப்பிடித்தனர். அதேபோல், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சமூகத்தில் பாஜக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அக்கட்சி வெற்றி பெற விடமாட்டோம். இதுபோன்ற சக்திகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெறுவோம். 
அரசியல் ஆதாயத்துக்காக, நமது ராணுவத்தை பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. வலிமையான பிரதமர் இருப்பதால், நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். உண்மையில், தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யும் வீரர்கள் எல்லையில் காவலில் இருப்பதால்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்புடன் இருக்கின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com