
வங்கி மோசடி வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான ஒய்.எஸ்.சௌதரிக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவரை ஆஜராகுமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் வங்கி மோசடி வழக்கில் விசாரணை நடத்தப்படவுள்ளது' என்று தெரிவித்தனர்.
ஆந்திரா வங்கியில் மோசடி செய்து ரூ.71 கோடி பெற்றதாக 2 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சென்னையைச் சேர்ந்த பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் இன்ஜீனியரிங் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும், அந்நிறுவனத்தின் 5 இயக்குநர்களுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.