வாழ்வதற்கு தகுதியான நகரமாக தில்லியை உருவாக்குவோம்! : கௌதம் கம்பீர் வாக்குறுதி

சுத்தமான காற்று, குடிநீருடன் கூடிய மக்கள் வாழ்வதற்கு தகுதியான நகரமாக தில்லியை முதலில் மாற்றுவோம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
வாழ்வதற்கு தகுதியான நகரமாக தில்லியை உருவாக்குவோம்! : கௌதம் கம்பீர் வாக்குறுதி

லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களுக்கு இணையானதாக தில்லியை மாற்றுவோம்' எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், சுத்தமான காற்று, குடிநீருடன் கூடிய மக்கள் வாழ்வதற்கு தகுதியான நகரமாக தில்லியை முதலில் மாற்றுவோம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், வியாழக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, கிழக்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்வி ஆகியோரை விமர்சிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளைக் கூறி வாக்குக் கேட்கவுள்ளேன். தில்லியை லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு இணையானதாக மாற்றவுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால், தில்லியை முதலில் நாம் தில்லியாக மாற்ற வேண்டும்.  சுத்தமான காற்று, குடிநீர் இல்லாமல் தில்லி மக்கள் தவிக்கின்றனர். எனவே, முதலில் மக்கள் வாழ்வதற்கு  தகுதியான நகரமாக தில்லியை  மாற்றுவோம்.  தில்லியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இங்கேதான் கல்வி கற்றேன். கிழக்கு தில்லியில் எனது அப்பா கடை வைத்திருந்தார். கிழக்கு தில்லியுடன் நான் உணர்வு பூர்வமாகப் பிணைக்கப்பட்டுள்ளேன்.  தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் மிகச் சிறந்த மக்களவைத் தொகுதியாக கிழக்கு தில்லியை உருவாக்குவேன். இதை நான் வாக்குறுதியாக மட்டுமல்லாமல் சத்தியமாகவும் வழங்குகிறேன்.

கிரிக்கெட்டை எவ்வளவு ஈடுபாட்டுடன் இதய சுத்தியாக விளையாடினேனோ, அதேபோல அரசியலிலும் ஈடுபடுவேன்.  கிரிக்கெட் போல அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குளிர்சாதன அறைகளில் இருந்து மக்கள் பிரச்னைகள் தொடர்பாக சுட்டுரையில் கருத்துத் தெரிவிப்பது இலகுவானது. ஆனால், களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுவது கடினமானது.  தில்லியில் தங்களது தோல்விகளை மறைக்கவே முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com