ரஃபேல் வழக்கு: மோடியை திருடர் என்று விமரிசித்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் ராகுல்

உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடர் என்று கூறிவிட்டதாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.
ரஃபேல் வழக்கு: மோடியை திருடர் என்று விமரிசித்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் ராகுல்

புது தில்லி: உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடர் என்று கூறிவிட்டதாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

ரஃபேல் ஊழல் வழக்கு விசாரணையின் போது பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டதாக ராகுல் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம்  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தபோது, மோடியை திருடன் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காமல், வருத்தம் தெரிவித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். ராகுல் காந்தி மன்னிப்புக் கோரியது தொடர்பாக மே 6ம்  தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் உள்பட அனைத்து ஆவணங்களின் அடிப்படையிலும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 

இதையடுத்து ராகுல் காந்தி, நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி), திருடன் என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது என்று கூறி வருவதுடன், அதைத் தேர்தல் பிரசாரமாகவும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது தனது சொந்தக் கருத்துகளைத் திணிப்பதாகவும், நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகச் சித்திரிப்பதாகவும் கூறி, ராகுலுக்கு எதிராக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ராகுலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மீனாட்சி லேகியின் மனுவைக் கடந்த 23-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுலுக்கு கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

அரசை எதிர்ப்பதற்காகவே...: இதைத் தொடர்ந்து, 28 பக்கங்கள் கொண்ட விரிவான பிரமாணப் பத்திரத்தை, ராகுல் காந்தி தனது வழக்குரைஞர் சுனில் ஃபெர்ணான்டஸ் மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில் அவர் கூறியிருந்ததாவது, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காரணத்தினால், நான் அவ்வாறு கூறிவிட்டேன். அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால், அதை வேண்டுமென்றே நான் கூறியதுபோல, எனது அரசியல் எதிரிகள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ரஃபேல் விவகாரத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்து, இதில் ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பரப்பி வந்த தவறான கருத்துகளை எதிர்கொள்வதற்காகவும், அரசை எதிர்க்கவுமே நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

அவமதிக்கும் நோக்கமில்லை: உச்சநீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது அரசியல் தளத்துக்குள் உச்சநீதிமன்றத்தை இழுக்க வேண்டும் என்ற நோக்கிலோ நான் அவ்வாறு கூறவில்லை. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று கூறி, மத்திய அரசின் வாதங்களைக் கடந்த 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான தீர்ப்பாகவே கருதப்படும். எனவேதான் அவ்வாறு கூறினேன். உச்சநீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

தீர்ப்பைப் படிக்கவில்லை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்றோ, நீதித்துறையை எதிர்க்க வேண்டும் என்றோ, நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்றோ, நீதிமன்றத்தின் மீது பழிசுமத்தும் நோக்கிலோ நான் அவ்வாறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. நான் அக்கருத்தைக் கூறியபோது, தீர்ப்பின் முழு விவரம் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதனால், நான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தீர்ப்பைப் படிக்காமலேயே நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் மனுதாக்கல் செய்துள்ளவர் (மீனாட்சி லேகி) தனது சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது நீதிமன்ற நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதுபோல் உள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் ராகுல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மே 6ம் தேதிக்குள் மன்னிப்புக் கேட்டு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com