35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் மோடி உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்: ராம் மாதவ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.
35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் மோடி உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்: ராம் மாதவ்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் கூறியதாவது:
35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதேநேரத்தில், அந்த விவகாரம் தொடர்பாக கட்சியால் எந்த முடிவும் எடுக்க இயலாது. அதுகுறித்து பிரதமரும், அவர் தலைமையிலான மத்திய அரசும்தான் முடிவு செய்யும். ஆனால் 35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் என்னால் உறுதியளிக்க முடியும். அதுதொடர்பாக மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், மாநில அரசின் நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்கு, அந்த மாநிலத்தில் நிகழும் சம்பவங்களுடன் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை தொடர்புப்படுத்தி பீதியை கிளப்பி விடுகின்றன. தங்களது அரசியல் நலன்களுக்காக இதை அக்கட்சிகள் செய்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புவதும், அங்கிருக்கும் பாதுகாப்புப் படையினரை வெளியேற்றுவதும் இயல்பான ஒன்றுதான்.
சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாகத்தான், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. ஹிந்து சட்டத்தில் சிறார் திருமணத்துக்கு தடை விதித்தது போல, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முத்தலாக் தடை மசோதாவும் முக்கியமான நடவடிக்கையாகும்.
முத்தலாக் தடை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் சிலர் நேரடியாக ஆதரவு அளித்தனர். சிலர் வாக்கெடுப்பை புறக்கணிப்பு செய்து, மறைமுகமாக ஆதரவு தந்தனர். இந்த ஆதரவுக்காக அவர்களுக்கு பாஜகவின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராம் மாதவ்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்? என்ற கேள்விக்கு ராம் மாதவ் பதிலளிக்கையில், இந்தக் கேள்விக்கு தேர்தல் ஆணையத்தால்தான் பதிலளிக்க முடியும். இருப்பினும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை கட்சி தொடங்கி விட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் கோரிக்கையாகும் என்றார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில், மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 35-ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று  வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com