மருத்துவ ஆணைய மசோதா எதிர்ப்பு: மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மருத்துவ ஆணைய மசோதா எதிர்ப்பு: மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து, நாடு முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று நள்ளிரவு முதல் அவசரப் பிரிவு பணியை மட்டும் தொடங்கியுள்ளனர். ஆனால், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அவசரப் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளிலும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் இரண்டு மருத்துவமனை நிர்வாகங்களும் குறிப்பாணையை வெளியிட்டுள்ளனர். 

"இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள் சங்கம் உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தங்களது துறை சார்ந்த பணிகளுக்குத் திரும்ப வேண்டும். இதைச் செய்ய தவறினால், பணியிடை நீக்கம், விடுதியில் இருந்து வெளியேற்றுதல் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சஃப்தர்ஜங் மருத்துவமனை இயக்குநர் சுனில் குப்தா, இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவரிடம் பேசுகையில், "மருத்துவர்கள் தங்களது பணியை உடனடியாகத் தொடராவிட்டால், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது பணியிடைநீக்கம், விடுதியில் இருந்து வெளியேற்றுவது போன்ற கடுமையான தண்டனைக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை உங்களிடம் தெரிவிக்குமாறு மத்திய அரசு என்னைக் கேட்டுக்கொண்டுள்ளது" என்றார்.    

இந்த மசோதாவின் சில அம்சங்கள் ஏழை மக்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மருத்துவர்கள் தங்களது வாதத்தை முன் வைக்கின்றனர். எய்ம்ஸ் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், "மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மசோதாவில் குறிப்பிடத்தக்க சில அத்தியாவசியத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சஃப்தர்ஜங் மருத்துவமனை இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர் பிரகாஷ் தாகுர், "போராட்டம் தொடரும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com