
அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழுவின் சமரசப் பேச்சு தோல்வியில் முடிவடையும் என முன்பே எனக்குத் தெரியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் அந்த இடத்துக்கு உரிமை கோரி வரும் சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்றுஅமைப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், மத்தியஸ்த குழுவின் சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்றும், இந்த வழக்கில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், அயோத்தி வழக்கை விசாரித்து வந்த முக்கிய வழக்குரைஞர் பரமஹம்ச சந்திரதாஸின் 16-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை அயோத்தி நருக்கு வந்தார். அங்கு துறவிகள் மத்தியில் அவர் கூறியதாவது: ராமஜென்மபூமி நில விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் சமரசப் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் கிடைக்காது என்பது முன்பே எங்களுக்குத் தெரியும். இருப்பினும், இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது நல்லதுதான். மகாபாரத காலத்திலேயே சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவை தோல்வியில் முடிந்துள்ளன என்றார் யோகி ஆதித்யநாத்.