
ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் பீதியை ஏற்படுத்தும் முயற்சியில் திட்டமிட்டு ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்முவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு, ரவீந்தர் ரெய்னா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அச்சத்தின் காரணமாக, சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் வீட்டுக் கதவை நள்ளிரவில் தட்டியுள்ளனர். ஊழல் புரிந்தவர்கள் தப்பிக்க முடியாது என்று ஆளுநர் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளார். தீய நோக்கம் கொண்டவர்கள், நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டவர்கள், ஏழை மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து தங்களது பணப்பெட்டியை நிரப்பியவர்கள் ஆகியோர் தற்போது கவலையில் உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்பான 35ஏ சட்டப் பிரிவு, 370ஆவது சட்டப் பிரிவு ஆகியவையே மாநிலத்தில் நிலவும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகிய பிரச்னைகளுக்கு காரணம். இந்த சட்டப் பிரிவுகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன.
இந்தப் பிரிவுகளால், மாநில மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் வங்கி, மத்திய நிதி ஆகியவை சில குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன.
தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகள், காஷ்மீர் மக்கள் மத்தியில் தங்களது சுயநலத்துக்காக வதந்தியை பரப்பி பீதியை ஏற்படுத்தி வருகின்றன. சாமானிய மக்களுக்கு எந்த அச்சமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் ஒவ்வொரு பிரஜையும் பாதுகாப்பாக உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மாநிலத்துக்கு பல முறை பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் வந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு, காஷ்மீர் மக்களின் துன்பத்துக்கு மருந்திட்ட ஒரே பிரதமர் மோடிதான். அவர் மீதும், அவரது தலைமையிலான மத்திய அரசின் மீதும் நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் ஒவ்வொரு முடிவும், ஜம்மு, லடாக், காஷ்மீர் ஆகிய 3 பிராந்திய மக்களின் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே எடுக்கப்படுகிறது.
விரைவில் வரவிருக்கும் சுதந்திர தினத்தை ஜம்மு-காஷ்மீர் மக்கள் அனைவரும், தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி உற்சாகமாக கொண்டாட வேண்டும்.
பாகிஸ்தான் தூண்டுதலால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டே, கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நமது பாதுகாப்புப் படையினரால்தான் நமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். சீனா, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் பாதுகாப்புப் படையினர் நமக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்படவில்லையெனில், இந்த மாநிலத்தை சுடுகாடாக பாகிஸ்தான் மாற்றியிருக்கும். மாநில மக்கள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்றார் அவர்.