அத்துமீறி நுழைந்த பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். 
அத்துமீறி நுழைந்த பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவம் எச்சரித்தது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஜூலை 31-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 36 மணிநேரத்தில் இந்த போக்கு தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் மூலம் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 7 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தானின் முத்திரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com