
மும்பையில் உள்ள 4 மாடி வணிகக் கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டபோது 3 வீரர்கள் காயமடைந்தனர். வணிகக் கட்டடத்திலிருந்து 4 பேர் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அப்துல் ரகுமான் தெருவில் நவ்ரங் என்ற கட்டடத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாலை 4.24 மணிக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் 150 வீரர்கள் ஈடுபட்டனர். புகை அதிகமாக சூழ்ந்திருந்ததால், தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டது. ஒருவழியாக மாலை 4.45 மணிக்கு தீயை முழுமையாக அணைத்துவிட்டோம்.
ரோபோ, புகையை வெளியேற்றும் கேமரா ஆகியவை பயன்படுத்தப்பட்டன. தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. என்ன காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.