Enable Javscript for better performance
370, 35ஏ சிறப்பு சட்டப்பிரிவுகள் தற்காலிகமானது என ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்: அமித் ஷா- Dinamani

சுடச்சுட

  

  370, 35ஏ சிறப்பு சட்டப்பிரிவுகள் தற்காலிகமானது என ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்: அமித் ஷா

  By DIN  |   Published on : 05th August 2019 07:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amit_shah_on_JK_bill

   

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான மசோதாவை தாக்கல் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

  370-வது மற்றும் 35ஏ சிறப்பு சட்டப்பிரிவுகளால் ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து முதலில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதனால் தான் அங்கு முழுமையான ஜனநாயகம் அமல்படுத்தப்படவில்லை. ஊழல் பெருகியது, வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் ஏற்படுத்த முடியாமல் மாநிலம் பாதிக்கப்பட்டது.

  மதம் சார்ந்த, வாக்கு வங்கி சார்ந்த அரசியலை பாஜக விரும்பியதில்லை. காஷ்மீர் என்றால் அங்கு முஸ்லிம்கள் மட்டும் வாழ்வதாக கூறி வருகின்றனர். ஆனால் ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள், ஜெயின் மற்றும் பௌத்தர்கள் என அனைவரும் அங்கு வசித்து வருகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

  எனவே இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்குமானது தான். எனவே இதனால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்ற பிம்பங்களை கட்டமைக்க வேண்டாம். 

  ஆயுஷ்மான் பாரத் திட்டம் கூட அங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைகள் எங்கே? மருத்துவர்கள் எங்கே? அங்கு சென்று ஒரு மருத்துவரால் ஆவது பணி செய்ய முடியுமா? அங்கு சென்றால் அவரால் தனக்கென நிலமோ, வீடோ வாங்க முடியுமா? அவர்களது வாரிசுகளின் எதிர்காலம்? வாக்களிக்க முடியுமா? இதற்கான பதில்களை இந்த சிறப்பு அந்தஸ்தை ஆதரிப்பவர்கள் கூற வேண்டும். 

  காஷ்மீரில் உள்ளவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து வருவதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். ஒருவேளை அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண், இதர மாநிலத்தைச் சேர்ந்தவரை மணந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு காஷ்மீரில் உள்ள அவர்களது சொத்துக்களில் உரிமை உண்டா? இனி இந்தியாவுடன் இணையும் சுதந்திரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது.

  இதனால் அங்கு வன்முறை ஏற்படும் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. அப்படியென்றால் அங்குள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி வன்முறையில் ஈடுபட வேண்டும் என்பது தானா? 18-ஆம் நூற்றாண்டைப் போன்று அவர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 21-ஆம் நூற்றாண்டின் வாழ்க்கைக்கு அவர்களை மாற்ற விருப்பமில்லையா? 

  காஷ்மீர் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் அனைத்து தலைவர்களும் தங்களின் வாரிசுகளை பத்திரமாக அமெரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் பாதுகாத்து வருகிறீர்கள். 

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் தற்காலிகமானது தான். இதனை பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது 70 ஆண்டுகளாக இது நீடிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் எத்தனை காலம் இந்த தற்காலிக விவகாரத்தை நீட்டிக்க விரும்புகிறீர்கள்? முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட இது தற்காலிகமானது தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

  ஜம்மு-காஷ்மீரில் அமைதி, இயல்பு நிலை திரும்பிய உடன், மீண்டும் யூனியன் பிரதேசத்தில் இருந்து மாநிலமாக மாற்றியமைக்கப்படும். இதற்கு அதிக காலம் ஆகலாம். ஆனாலும் நிச்சயம் ஒருநாள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai