அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள அதிநவீன ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள அதிநவீன ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
 இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் க்யுஆர்எஸ்ஏஎம் வான்பாதுகாப்பு ஏவுகணைகளில் இரண்டு, ஒடிஸா மாநிலம் பாலாசோரிலுள்ள சோதனை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதிக்கப்பட்டது.
 வானில் பறந்து சென்ற இலக்குகளைக் குறிவைத்து செலுத்தப்பட்ட அந்த இரு ஏவுகணைகளும், எதிர்பார்த்த அனைத்து அம்சங்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.
 அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள க்யுஆர்எஸ்ஏஎம் ஏவுகணைகள், பல்வேறு தொலைவு மற்றும் உயரங்களில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை ஆகும்.
 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ராடார், வழிகாட்டும் கருவி, ரேடியோ அலைகள் மூலம் இலக்கை உணரும் கருவி ஆகியவை இந்த ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
 க்யுஆர்எஸ்ஏஎம் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதற்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 வான்வழியாகத் தாக்க வரும் எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்த பிறகு, அவற்றை தரையிலிருந்து மிகத் துரிதமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்திய ராணுவத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
 இருந்தாலும் அந்தக் கொள்முதல் நடவடிக்கையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அந்த வகை ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முடிவு செய்தது.
 அதன்படி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட், பாரத் டைனமிக்ஸ் லிமிடட் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து க்யூஆர்எஸ்ஏஎம் ஏவுகணைகளை டிஆர்டிஓ உருவாக்கி வருகிறது.
 எந்த பருவ நிலையிலும், எத்தகைய நிலப்பகுதியிலும் சிறப்பாக செயல்படக்கூடிய இந்த ஏவுகணகளை டிஆர்டிஓ முதல் முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோதித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com