ஆந்திரத்தில் வெள்ளம்: 70,000 பேர் பாதிப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரத்தில் வெள்ளம்: 70,000 பேர் பாதிப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 ஆந்திரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் 6 மண்டலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெள்ளத்தால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோதாவரி கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதுவரை 17,632 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்ததால், மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. அங்குள்ள 280 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஏராளமான விளை நிலங்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. போலாவரம் அணை கட்டுமானம் நடைபெற்று வரும் பகுதியில் 29 மீட்டர் அளவுக்கு நீர் பாய்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் முடங்கிவிட்டன. கிழக்கு கோதாவரியின் தேவிபட்டணம் மண்டலத்தில் உள்ள கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனித் தீவாகக் காட்சியளிக்கிறது.
 ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கோதாவரியின் குறுக்கே உள்ள சில பாலங்களை மூழ்கடித்தபடி வெள்ள நீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் நோய் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 47 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர்களிடம், ஆந்திர மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி ஆலோசனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com