எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டோர் உடல்களை எடுத்துச்செல்ல பாக். ராணுவத்துக்கு அனுமதி

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் எடுத்துச் செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் எடுத்துச் செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
 இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கெரன் செக்டாரையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானின் எல்லை அதிரடிப் படை குழு (பிஏடி) வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அப்போது, இந்திய ராணுவத்துக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 இந்த நிலையில், வெள்ளைக் கொடி ஏந்தி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்தை கேட்டுக் கொண்டது. தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பொதுவாக, பாகிஸ்தானின் எல்லை அதிரடிப் படை குழுவில் அந்நாட்டு ராணுவத்தினரும், பயங்கரவாதிகளுமே இடம்பெற்றிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பாக். ராணுவம் மறுப்பு: எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடிப் படையினர் ஊடுருவ முயன்றனர் என்ற இந்திய ராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிஃப் கஃபூர் சனிக்கிழமை இரவு கூறியதாவது:
 எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்றதாக இந்தியா தெரிவித்துள்ளது வெற்றுக் கூச்சல். காஷ்மீர் நிலைமை குறித்த உலக அமைப்புகளின் பார்வையை இது திசை திருப்பும் முயற்சியாகும் என்றார் அவர். இதேபோல், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகமும் இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com