பெண்களின் வாக்குகளைப் பெற சிவசேனை பிரசார யாத்திரை

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்களின் வாக்குகளை இலக்காக வைத்து சிவசேனை கட்சி பிரசார யாத்திரையை தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்களின் வாக்குகளை இலக்காக வைத்து சிவசேனை கட்சி பிரசார யாத்திரையை தொடங்கியுள்ளது.
 அக்கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனையின் தலைவர் ஆதித்யா தாக்கரே "ஜன் ஆசீர்வாத்' என்ற பெயரில் யாத்திரை ஒன்றை நடத்திவரும் நிலையில், தற்போது "மெளலி சம்வாத்' என்ற பெயரில் மேலும் ஒரு யாத்திரை நடைபெற்று வருகிறது.
 இந்த யாத்திரைக்கான பொறுப்பாளராக கட்சியின் செயலரும், மராத்தி நடிகருமான ஆதேஷ் பாந்தேகர் நியமிக்கப்பட்டுள்ளார். பால்கர் மாவட்டம் அருகேயுள்ள தஹானுவில் தனது யாத்திரையை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய பாந்தேகர், தற்போது வரை பாய்சர், வதா, ஷாஹாபூர் ஆகிய பகுதிகளைக் கடந்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பிராந்திய தொலைக்காட்சியில் நான் பங்கேற்கும் "ஹோம் மினிஸ்டர்' என்ற நிகழ்ச்சி பெண்கள் மற்றும் அவர்களின் வீட்டு நிர்வாகம் தொடர்பானது. எனவே, இந்த யாத்திரையின்போது பெண்கள் தங்களது பிரச்னைகள் மற்றும் குறைகளை எந்தவொரு தயக்கமும் இன்றி என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
 இந்த யாத்திரையின் மூலம் அவர்களின் வலி, துன்பங்கள், தேவையான விஷயங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்த யாத்திரையில் கடந்த 2 நாள்களாக அவர்களுடன் பேச்சு நடத்தியதில் குடிநீர், கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம் போன்றவையே பிரதான விவகாரங்களாக இருந்தன.
 அவர்கள் கூறும் பிரச்னைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு அதற்குத் தகுந்த தீர்வு காண சிவசேனை செயல்படும். இந்த யாத்திரையின் மூலம் குறைந்தபட்சம் 100 முதல் 125 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். வீட்டை நிர்வகிக்கும் இல்லத்தரசிகள், பண்ணைத் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பழங்குடியினர் போன்றோர் தங்களது பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்கான தளத்தை ஏற்படுத்த சிவசேனை விரும்புகிறது என்று ஆதேஷ் பாந்தேகர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com