ரயில்வே அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி: ரயிலில் அதிக கட்டணம் எதிரொலி

விமானங்களுடன் ஒப்பிடுகையில், ரயில்களில் கட்டணமும், பயண நேரமும் அதிகமாக இருப்பதால் தங்களது அதிகாரிகள் ரயில்களுக்குப் பதிலாக விமானங்களில் பயணிப்பதற்கு தென்மேற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

விமானங்களுடன் ஒப்பிடுகையில், ரயில்களில் கட்டணமும், பயண நேரமும் அதிகமாக இருப்பதால் தங்களது அதிகாரிகள் ரயில்களுக்குப் பதிலாக விமானங்களில் பயணிப்பதற்கு தென்மேற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.
 கர்நாடகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது தென்மேற்கு ரயில்வே. இந்த ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த துணை பொது மேலாளர் ஒருவர், தில்லியில் நடைபெறும் ரயில்வே வாரிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானத்தில் பயணிக்க அனுமதி கோரி, தென்மேற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
 அதில் கூறப்பட்டிருந்ததாவது:
 இதர ரயில்வே மண்டலங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ரயில் மூலம் பயணித்தால் 12 மணி நேரங்களுக்கும் மேலாகிறது. ரயிலின் முதல் மற்றும் 2-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பதற்காக செலுத்தப்படும் கட்டணமானது, அந்த நகரங்களுக்கு செல்வதற்காக தனியார் விமானங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
 ரயில்வே கூட்டங்கள் யாவும் குறுகிய கால அவகாசத்துக்குள் ஏற்பாடு செய்யப்படுவதால் அதிகாரிகள் விரைவாக அந்தந்த நகரங்களுக்கு சென்றுசேர விமானப் போக்குவரத்தே வசதியாக இருக்கும். விமானப் பயணத்தின் மூலம் நேரம் மிச்சமாவதால் பணி தொடர்பான அதிகாரிகளின் செயல்திறன் அதிகரிக்கும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
 அந்த அனுமதிக் கடிதத்துக்கு ஒப்புதல் வழங்கிய தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அஜய் குமார் கூறுகையில், "ரயில்வே துறையில் கிளை அலுவலக அதிகாரிகள் முக்கியமானவர்கள். தில்லியில் நடைபெறும் 2 மணிநேரக் கூட்டத்துக்காக அவர்கள் 3 நாள்கள் ரயிலில் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இது, மத்திய அரசின் விதிகளுக்குள்பட்டதாகும்' என்றார்.
 முன்னதாக, பல்வேறு வழித்தடங்களில் ரயில்களில் பயணிப்பதைக் காட்டிலும் விமானத்தில் பயணிப்பது மலிவானதாகவும், விரைவானதாகவும் உள்ளது என மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தனது அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com