'இயல்பு நிலை என்னவென்று தெரியாமல் வளர்ந்தோம்': ஒரு காஷ்மீரியின் அனுபவமும் நச்சென்று ஒரு கவிதையும்

கடைசியாக காஷ்மீர் இந்த அளவுக்கு அமைதியாக்கப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமான பாலமாக இருந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதே தற்போதைய அமைதிக்குக் காரணம்.
'இயல்பு நிலை என்னவென்று தெரியாமல் வளர்ந்தோம்': ஒரு காஷ்மீரியின் அனுபவமும் நச்சென்று ஒரு கவிதையும்


கடைசியாக காஷ்மீர் இந்த அளவுக்கு அமைதியாக்கப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமான பாலமாக இருந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதே தற்போதைய அமைதிக்குக் காரணம்.

ஆயுதம் ஏந்திய ராணுவத்துக்கு மத்தியில், நிலையற்றத் தன்மைவாய்ந்த மண்ணில் பிறப்பது ஒரு சாபக்கேடுதான். நான் வளர ஆரம்பிக்கும் போது பல விஷயங்களை நினைத்தும் பயம் கொண்டேன்.

நான் இளைஞனாக இருந்த போது கூட காஷ்மீர் போலவே இந்தியா முழுவதும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் உலாவிக் கொண்டிருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆயுதங்களைப் பார்த்தால் பயப்படுவோம், ராணுவ வீரர்களைப் பார்த்தும் பயந்தோம், பயங்கரவாதிகளைப் பார்த்து அலறினோம். அவ்வளவு ஏன் பட்டாசு வெடித்தால் கூட அடித்து அலறிக் கொண்டு ஓடிவிடுவோம்.

2007ம் ஆண்டு 18 வயது இருக்கும் போது நான் படிப்புக்காக காஷ்மீரை விட்டு தென்னிந்திய மாநிலத்துக்கு வந்தேன். எப்போது சொந்த மாநிலத்தை விட்டு வந்தேனோ அப்போதுதான் காஷ்மீர் பற்றியும், இந்தியா பற்றியும் அறிந்து கொண்டேன். வெறும் ராணுவத்தைப் பற்றி மட்டுமல்ல, நண்பர்கள், ஆசிரியர்கள், பண்டிகைகள் என பல விஷயங்கள் உள்ளன.

அனைத்து காஷ்மீரி இளைஞர்களுமே அமைதியான இயல்பு வாழ்க்கை வாழவே விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில் இயல்பு நிலை என்றால் என்னவென்றே தெரியாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல சமயங்களில் காஷ்மீரி மக்களைப் போலவே நானும் நடக்கும் பல விஷயங்களையும் பார்த்தும் பிரச்னை வேண்டாம் என்பதற்காக வாய் திறக்காமல் அமைதியாக இருக்கவே பழக்கப்படுத்தப்பட்டேன். ஆனால் இதயம்? எத்தனையோ இளைஞர்களின் மரணங்களைப் பார்த்து மன அழுத்தத்துக்குள்ளானேன்.

அனைத்து விதமான வன்முறைகளையும் பார்த்து வளர்ந்த நான் அமைதியை விரும்பினேன். ஆனால் இன்றைய தினம் நான் பார்க்கும் போது எல்லைப் பகுதியில் எப்படி அமைதி திரும்பும் என்று பார்த்தால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

2016ம் ஆண்டு புர்ஹன் வானி கொல்லப்பட்ட போது, உள்ளூர் பயங்கரவாதிகள் அதிகளவில் உருவாகினர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பிஎச்டி முடித்தவர்கள் கூட பயங்கரவாதத்தைத் தேர்வு செய்து கொல்லப்பட்டனர். சிலர் தவறாக வழிநடத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தூண்டப்பட்டனர். ஆனால் யார் இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது, யார் இவர்களுக்கு சொல்லுவார்கள், இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று? அவர்களது மனதை யார் மாற்றுவார்கள்? என்னிடம் எந்த பதிலும் இல்லை.

காஷ்மீர் மக்களுக்கு நல்லது செய்யவே 370 சட்டப்பிரிவை நீக்குவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் எங்களைப் பொருத்தவரை காஷ்மீர் மக்களுக்கான ஒரு அடையாளத்தைப் பாதுகாக்கும் விஷயம்தான் 370 சட்டப்பிரிவு என்று கருதுகிறோம்.

ஒரு வார காலத்துக்கும் மேலாக காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. கடைசியாக என் தந்தையிடம் பேசும் போது எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தேவையான அளவுக்கு உணவு, மருந்து, அடிப்படைத் தேவைகளை வாங்கி வைத்திருக்கிறோம் என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடக்கும். நீ உன்னைப் பார்த்துக் கொள், பத்திரமாக இரு என்று கூறினார்.

ஆனால் 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை என் குடும்பத்தாரிடம் பேசவில்லை. காஷ்மீரில் இருக்கும் யாருடனும் பேச முடியவில்லை. எனது குடும்பத்தைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் அகா ஷாஹித் அலியின் புகழ்பெற்ற கவிதையை நினைவு கூர விரும்புகிறேன், "அவர்கள் ஊரடங்கை பிறப்பித்துவிட்டு அதை அமைதி என்று அழைப்பார்கள்" என முடிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com