சர்ச்சைக் கருத்து: பிரகாஷ் ராஜிடம் மன்னிப்புக் கேட்ட பாஜக எம்.பி 

நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்த சர்ச்சைக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக, பாஜக எம்.பி ஒருவர் பிரகாஷ் ராஜிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக் கருத்து: பிரகாஷ் ராஜிடம் மன்னிப்புக் கேட்ட பாஜக எம்.பி 

பெங்களூரு: நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்த சர்ச்சைக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக, பாஜக எம்.பி ஒருவர் பிரகாஷ் ராஜிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ்  கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அன்றிலிருந்து மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்  கடுமையாக தொடர்ந்து விமர்சித்தார்.

அதற்கு பதிலடியாக மைசூரு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்மா நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில்  கடுமையான கருத்துக்களை கூறி தனிப்பட்டரீதியிலும் விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்த சர்ச்சைக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக, பாஜக எம்.பி பிரதாப் சிம்மா, நடிகர் பிரகாஷ் ராஜிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அன்புள்ள பிரகாஷ் ராஜ். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2,3 தேதிகளில் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தேன். இதுபோன்ற கருத்துக்கள் உங்களை பாதித்து இருக்கும், புண்படுத்தி இருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். என்னுடைய பதிவுகளை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பேஸ்புக், ட்விட்டரில் இருந்து நீக்குகிறேன். வருத்தம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், 'நன்றி பிரதாப் சிம்மா. உங்களின் மன்னிப்பை ஏற்கிறேன். சித்தாந்த ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட ரீதியில், அவதூறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிடக்கூடாது' என்று பதில் அளித்து விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com