
"ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முடிவு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; ஆதலால் இருதரப்பு உறவை முறித்துக் கொள்ளும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இவ்வாறு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது எப்போதும் உள்நாட்டு விவகாரம் சம்பந்தப்பட்டதாகும். பிராந்தியத்தில் அபாயம் நிலவுவதாக தெரிவித்து இந்த விவகாரத்தில் தலையிடும்படி கோருவது எப்போதும் வெற்றி பெறாது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முந்தைய தற்காலிக சட்டப் பிரிவு, மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்தது. எனவே அந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக தற்காலிக சட்டப் பிரிவை நீக்குவது என்று மத்திய அரசும், இந்திய நாடாளுமன்றமும் தீர்மானித்தன.
இருதரப்பு உறவுகளில் அபாயமான நிலை காணப்படுவதாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்கமே, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை குறைப்பது தொடர்பான பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணியில் உள்ளது. பாகிஸ்தான் அரசால் புதன்கிழமை எடுக்கப்பட்ட முடிவு, இந்திய அரசுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆதலால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கோருகிறது. ஜம்மு-காஷ்மீரில் நிலவிய சமூக-பொருளாதார மற்றும் பாலின சமத்துவமின்மையை நீக்க வேண்டும் என்பதுதான், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்திய அரசின் முடிவுக்கு காரணம். இதனால் ஜம்மு-காஷ்மீரில் பொருளாதார செயல்பாடுகளும், மக்களின் வாழ்வாதார முயற்சிகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் பாகிஸ்தானில் எதிர்மறையாக உணரப்படும் என்பதும், இத்தகைய உணர்வுகளை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த பாகிஸ்தான் பயன்படுத்தும் என்பதும் ஏற்கெனவே தெரிந்ததுதான். எனவே, பாகிஸ்தானின் செயல்பாடு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் அரசு பிரித்தது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முறித்துக் கொள்வதென்றும், தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்வதென்றும் புதன்கிழமை முடிவெடுத்தது.