மகாராஷ்டிரத்தில் தொடரும் கனமழை: படகு கவிழ்ந்து 9 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமையும் கனமழை பெய்தது. அங்கு வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்திலுள்ள காராட் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை வியாழக்கிழமை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்திலுள்ள காராட் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை வியாழக்கிழமை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமையும் கனமழை பெய்தது. அங்கு வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாநிலத்திலுள்ள சாங்லி மாவட்டம் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. மாவட்ட சிறை வளாகத்துக்குள் வியாழக்கிழமை வெள்ளநீர் புகுந்ததால், சிறையின் தரைத்தளத்தில் இருந்த 370 கைதிகள் மேல்தளத்துக்கு மாற்றப்பட்டனர்.
மாநிலத்திலுள்ள புணே, சதாரா, சோலாபூர், சாங்லி, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 1.32 லட்சம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும்  கனமழையால் மேற்கு மகாராஷ்டிரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.
பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளிட்டவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
9 பேர் பலி: சாங்லி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, புணே காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 30 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் படகு ஒன்று பாதுகாப்பான பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். நீரில் மூழ்கிய 4 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.
"அரசே காரணம்': மகாராஷ்டிர மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு, மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசின் திறனற்ற செயல்பாடே காரணம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""முதல்வர் ஃபட்னவீஸ் தனது யாத்திரையின் மீது மட்டுமே கவனம் கொண்டுள்ளார். ஒரு நாள் மட்டும் யாத்திரையை ரத்து செய்துவிட்டு, வெள்ள நிலைமை குறித்து அவர் ஆய்வு நடத்தினார். அதுவும், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாகவே அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். வெள்ளத்தைச் சமாளிப்பதில் மாநில அரசு திறனற்று செயல்பட்டு வருகிறது. மக்களின் துயரத்துக்கு மாநில அரசே முழுக் காரணமாகும்'' என்றார்.
அணை திறப்பு: இதனிடையே, மகாராஷ்டிரத்தின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், கர்நாடகத்தில் உள்ள அல்மாட்டி அணை திறக்கப்படும் என அந்த மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸூக்கு கடிதம் மூலம் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவாவில் மழை: கோவா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக, சுமார் 150 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கனமழை காரணமாகவும், மகாராஷ்டிர அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் காரணமாகவும், கோவாவின் பல
பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 
அடுத்த சில நாள்களுக்கு மாநிலத்தில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, மீட்புப் படைகள் அனைத்தும் தயார்நிலையில் இருப்பதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

கனமழை காரணமாக போராட்டம் ஒத்திவைப்பு

மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்தில் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெறுவது, உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையைக் கருத்தில்கொண்டு, போராட்டத்தை ஒத்திவைப்பதாக அவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com