கேரளத்தில் தொடரும் கனமழை: ஒரே நாளில் 33 பேர் பலி

கேரளத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வந்த கனமழை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மட்டுமே மழை தொடர்பான சம்பவங்களால்
கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்ததை அடுத்து அங்குள்ள வயநாடு மாவட்டம், கல்பெட்டாவில் வெள்ளிக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம்.
கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்ததை அடுத்து அங்குள்ள வயநாடு மாவட்டம், கல்பெட்டாவில் வெள்ளிக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம்.

கேரளத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வந்த கனமழை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மட்டுமே மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கேரளம் கடந்த 2018-ஆம் ஆண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மாநிலம் மீண்டு வரும் நிலையில், அங்கு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டு நிகழ்ந்த சோகம் நிகழாண்டிலும் ஏற்படுமோ என்று மாநில மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

மாநிலத்தில் பெய்து வரும் மழையால் வயநாடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில், 9 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு தொடர்பாக, மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கனமழை காரணமாக 24 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள் தீவிரம்:  வெள்ளம் காரணமாக, மக்களுக்குக் குடிநீர் விநியோகிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், வனத் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், ராணுவ மற்றும் விமானப் படை வீரர்களின் உதவியையும் கோரியுள்ளோம் என்றார் பினராயி விஜயன்.

மலப்புரம் மாவட்டம், கவளப்பாறையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஒரு குன்று தரைமட்டமானது. அங்கு ஏராளமானோர் சிக்கியுள்ளனர். 

இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் புத்துமலை என்னும் குன்று தரைமட்டமானது. அங்கு ஒரு கோயில், ஒரு தேவாலயம், ஒரு மருத்துவமனை, பல குடியிருப்புகள் மண்ணுக்கு அடியில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி இறந்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்கு அடியில் மேலும் பலர் பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். 
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

விமானச் சேவைகள் ரத்து: கனமழை காரணமாக விமான ஓடுபாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை வரை விமானச் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கொச்சி விமான நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, விமான நிலையம் வெளியிட்ட குறிப்பில், "கனமழை காரணமாக பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. விமான நிலையத்துக்கு அருகேயுள்ள கால்வாயிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி வரை விமான நிலையம் மூடப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார்நிலையில் கடற்படை: கேரளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""கேரளத்தில் நிலவி வரும் சூழலைக் கருத்தில்கொண்டு, கடற்படையின் தெற்குப்பிரிவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொச்சி விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால், விமானங்களைத் தற்காலிகமாக கடற்படைத் தளத்தில் நிறுத்திக் கொள்ள மாநில அரசு அனுமதி கோரியிருந்தது. 

விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்வரை விமானங்களை நிறுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com