மழை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் பலி?

கர்நாடகத்தில் மழை மற்றும் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

கர்நாடகத்தில் மழை மற்றும் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மேலாற்றுப்படுகை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள அல்மாட்டி அணை, நாராயணபுரா அணை உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

கர்நாடக தீயணைப்பு வீரர்கள்,  மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவ வீரர்களின் கூட்டு முயற்சியால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மேலும்,  மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மழையால் வீடுகள் இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   கால்நடைகளும் ஏராளமாக இறந்துள்ளன. பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ராய்ச்சூரு,  யாதகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 51 வட்டங்களின் 732 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 467 மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் 2 ஆயிரம் கி.மீ. சாலைகள், மேம்பாலங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  வட கர்நாடகத்தைப் போல கடலோர கர்நாடகம், மலைநாடு கர்நாடகத்திலும் மழை பாதிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. 

குடகு,  சிக்மகளூரு, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் வெள்ளம் அதிகரித்துள்ளது.  வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மழை அதிகரித்து, வெள்ளப் பாதிப்புகள் தொடர்வதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையும், திங்கள்கிழமை பக்ரீத் என்பதாலும், பள்ளி,  கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com