காஷ்மீரில் களைகட்டாத பக்ரீத்: கொண்டாட என்ன இருக்கிறது? யாருடன் கொண்டாடுவது? மக்களின் குரல்!

இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுவதே பக்ரீத் பண்டிகை. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் பண்டிகையையே தியாகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
காஷ்மீரில் களைகட்டாத பக்ரீத்: கொண்டாட என்ன இருக்கிறது? யாருடன் கொண்டாடுவது? மக்களின் குரல்!

இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுவதே பக்ரீத் பண்டிகை. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் பண்டிகையையே தியாகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போதைக்கு எங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு எங்களது உயிர் மட்டுமே விட்டுவைக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து உரிமைகளும், அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டது.

இந்த முறை பக்ரீத் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது? யாருடன் கொண்டாடுவது என்று கேட்கிறார் குலாம் மெஹ்மூத். இதையேதான் ஸ்ரீநகரில் வசிக்கும் பலரும் முன்மொழிகிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதில், பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இது மாறியுள்ளது. அதேப்போல, பல கெடுபிடிகளுக்கு இடையே அமைதியான முறையில் அதே சமயம் பக்ரீத் பண்டிகையை மகிழ்வோடு கொண்டாடுவதும் இஸ்லாமியர்களுக்கு சவாலாகவே உள்ளது.

பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தைக் குறைத்ததில், கெடுபிடிகளுக்கு ஈடாக, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் இதுதான் முதல் பக்ரீத் பண்டிகை, அனைத்து தகவல் தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது என்கிறார்கள்.

காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றம், பயம், நிலையற்றதன்மை போன்ற சூழ்நிலை பக்ரீத் சிறப்புத் தொழுகை மூலம் சரியாகும் என்று உள்ளூர் நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

வழக்கமாக, பக்ரீத் பண்டிகைக்கு ஒருசில நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருக்கும். ஆனால், இம்முறை, உறவுகளை தொடர்பு கொண்டு அழைக்கவோ, விருந்து கொடுக்க செல்லவோ முடியாத நிலையில் இருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள்.

காஷ்மீரை விட்டு வெளியே படிக்கவோ, பணியாற்றவோ செல்லும் மக்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட காஷ்மீர் திரும்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏராளமானோர் காஷ்மீர் திரும்பவில்லை. அப்படியே வர வேண்டும் என்று விரும்பினாலும், குடும்பத்தினரிடம் இருந்து வரும் பதில் வரவேண்டாம் என்பதாகவே உள்ளது.

கெடுபிடி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கூட தொழுகை நடத்த மிகக் குறைந்த மக்களே வந்திருந்தனர். கூட்டத்தால் நிரம்பும் மசூதிகள் கூட வெறிச்சோடின. 

பக்ரீத் பண்டிகைப் பற்றி ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டபோது பலமாக சிரித்தபடியே கூறினார், எங்கள் சொந்த பூமியிலேயே நாங்கள் பேய்களைப் போல அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பக்ரீத் பண்டிகையின் போது காஷ்மீர் எப்போதும் இப்படி இருந்ததில்லை. அவ்வளவு ஏன், புர்ஹான் வானி 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட போது கூட இப்படி இல்லை. 19ம் நூற்றாண்டுகளில் பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் காஷ்மீர் சிக்கியிருந்த போதும் கூட. எதற்காக நாங்கள் இப்படி தண்டிக்கப்பட்டுள்ளோம்? என்று வேதனையோடு பேசினார்.

பக்ரீத் பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும் சந்தையில், ஆடுகளை விற்க வந்தவர்களுக்கு கொள்வார் இல்லாத நிலையில் காத்திருந்த அவல நிலையும் காணப்பட்டது.

காஷ்மீரில் ஓரிடத்தில் அதிகமானோர் கூட தடை விதிக்கப்பட்டிருப்பதால், இந்த முறை காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை கலைகட்டவில்லை. தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகயையே இந்த ஆண்டு இஸ்லாமிய மக்கள் தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com