கேரளம், கர்நாடகத்தில் தொடர் மழை: 112 பேர் பலி

அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த கோட்டைக்குன்னு பகுதி.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த கோட்டைக்குன்னு பகுதி.

அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது. இரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 8.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், மாநில வெள்ள நிலைமை தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன், உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்து விட்டனர். வெள்ள பாதிப்புப் பகுதிகளில் இருந்து 2.5 லட்சம் பேர் மீட்கப்பட்டு 1,639 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை நின்றபோதிலும் நாம் உஷாராக இருக்க வேண்டியுள்ளது.

நிலச்சரிவுகளில் இருந்து தப்புவது சுலபமல்ல.

தற்போது முக்கிய அணைகளில் நீர்மட்டம் கவலைதரும் வகையில் இல்லை. மாநிலத்திலேயே பெரிய அணையான இடுக்கி அணையில் 36.61 சதவீதம் அளவுக்கே நீர் உள்ளது என்றார் அவர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை, போலீஸார், தன்னார்வலர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கொச்சி விமான நிலையம் திறப்பு: இதனிடையே, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் தொடங்கியது. முன்னதாக, ஓடுபாதையில் வெள்ள நீர் தேங்கியிருந்ததால் விமான நிலையம் இரு நாள்களுக்கு முன் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரயில்கள் ரத்து: தொடர் மழை காரணமாக ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்,  நிஜாமுதீன்-எர்ணாகுளம் துரந்தோ, கொச்சுவேளி - அமிருதசரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துவிட்டது. 

வானிலை மையம் எச்சரிக்கை: கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எனப்படும் மிகத் தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை, கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரையில் 21 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அந்த மாநிலத்திலேயே அதிகபட்ச மழைப்பொழிவாகும். அதைத் தொடர்ந்து திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூரில் 19.09 செ.மீ. மழையும், மலப்புரம் மாவட்டத்தின் பெரிந்தல்மண்ணா பகுதியில் 12.8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மத்திய அரசு பாரபட்சம்: மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் கூறுகையில், "கடந்த ஆண்டு கேரளத்தில் ரூ.10,000 கோடி அளவுக்கு வெள்ளச்சேதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.3,000 கோடியை மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக வழங்கியது. எனினும், வெள்ள பாதிப்பே ஏற்படாத உத்தரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.200 கோடியை வழங்கியது. இது மத்திய அரசின் பாரபட்சமான போக்கைக் காட்டுகிறது' என்றார். 

கர்நாடகத்தில் மழைக்கு 40 பேர் பலி: கர்நாடகத்தின் 17 மாவட்டங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை மழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5.82 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 3.27 லட்சம் பேர் 1,168 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வட கர்நாடகத்தின் பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ராய்ச்சூரு, யாதகிரி, கலபுர்கி, தார்வாட், ஹாவேரி, கடலோர கர்நாடகத்தின் வட கன்னடம், தென் கன்னடம், உடுப்பி, குடகு, மலைநாடு கர்நாடகத்தின் சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், தென் கர்நாடகத்தின் மைசூரு மாவட்டங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் 17 மாவட்டங்களின் 80 வட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 2,028 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சாலைகள், குளங்கள், ஏரிகள் தண்ணீர் நிரம்பி ததும்புவதால், வெள்ளக்காடாகியுள்ளன.  தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால்,  பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.  

கால்நடைகளுக்கு பாதிப்பு: வெள்ளத்தில் 525 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய 50,595 கால்நடைகள் மீட்கப்பட்டு, அவற்றில் 32,305 கால்நடைகள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. 

மாநிலம் முழுவதும் 4,40,039 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதுவரை 28,325 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீயணைப்புப் படையினர் தவிர தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த தலா 60 பேர் கொண்ட 20 அணிகள், ராணுவத்தைச் சேர்ந்த 400 வீரர்கள்,  மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த தலா 43 பேர் கொண்ட 2 அணியினர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அமித் ஷா - எடியூரப்பா ஆய்வு

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் ஞாயிற்றுக்கிழமை  பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

வயநாட்டுக்கு ராகுல் வருகை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு  மாவட்டத்தை நேரில் பார்வையிட அத்தொகுதியின் எம்.பி.யும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

தில்லியில் இருந்து வயநாட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கேரளத்தைச் சேர்ந்த மூத்த தலைவருமான கே.சி.வேணுகோபாலும் இருந்தார். வயநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் நேரில் பார்வையிட்டார். அங்குள்ள ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர் சந்தித்துப் பேசினார். அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்தார். 

அதன் பிறகு மலப்புரம் மாவட்டத்துக்குச் சென்ற ராகுல், அங்கு வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலம்பூர் அருகில் உள்ள கவளப்பாறை பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது உள்ளூர்வாசிகள் கூறுகையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு 35 வீடுகள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் போய்விட்டதாகவும் 65 பேர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும் அவர்கள் மீண்டு வர தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com