சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை ரத்து செய்தது இந்தியா

தில்லி-அட்டாரி சர்வதேச எல்லை இடையே இயக்கப்படும் சம்ஜெளதா விரைவு ரயிலின் சேவையை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 
சம்ஜௌதா விரைவு ரயில் (கோப்புப் படம்).
சம்ஜௌதா விரைவு ரயில் (கோப்புப் படம்).

தில்லி-அட்டாரி சர்வதேச எல்லை இடையே இயக்கப்படும் சம்ஜெளதா விரைவு ரயிலின் சேவையை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 
பாகிஸ்தானின் லாகூர்-அட்டாரி இடையே இயக்கப்படும் சம்ஜெளதா ரயில் சேவையை அந்நாட்டு அரசு ரத்து செய்ததை அடுத்து இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் கூறுகையில், "லாகூர்-அட்டாரி இடையே பாகிஸ்தானால் இயக்கப்படும் சம்ஜெளதா ரயிலின் (14607/14608) சேவையை அந்நாடு ரத்து செய்ததை அடுத்து, தில்லி-அட்டாரி இடையே இந்தியாவால் இயக்கப்படும் சம்ஜெளதா ரயிலின் (14001/14002) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) புறப்பட இருந்த ரயிலில் பயணிப்பதற்காக இருவர் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தனர்' என்றார். 
சம்ஜெளதா ரயில் சேவையானது இந்தியா-பாகிஸ்தான் இடையே இணைப்பு ரயில்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தில்லியிலிருந்து அட்டாரிக்கு இந்தியத் தரப்பிலும், லாகூரிலிருந்து அட்டாரிக்கு பாகிஸ்தான் தரப்பிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருநாட்டு பயணிகளும் அட்டாரி எல்லையில் அந்தந்த நாடுகளுக்கான இணைப்பு ரயில்களில் மாறி ஏறிக்கொள்வர். 
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்ஜெளதா விரைவு ரயில், தார் விரைவு ரயில் சேவைகளை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 
"தார்' சேவை தொடர வேண்டும்: இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் தார் விரைவு ரயில் சேவை நிறுத்தப்படக் கூடாது என்று இருநாட்டு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டால், அது இருதரப்பு மக்களிடையேயான தொடர்புகளை பாதிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.  தார் விரைவு ரயில் மூலம் இந்தியாவிலிருந்து 81 பேர் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானைச் சென்றடைந்த நிலையில், அந்நாட்டிலிருந்து 103 பேர் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தடைந்தனர். தார் விரைவு ரயில், பாகிஸ்தானின் கராச்சி - இந்தியாவின் ஜோத்பூர் இடையே இணைப்பு ரயில்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com