Enable Javscript for better performance
கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாகக் கூடாது: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாகக் கூடாது: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th August 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaisakar

  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை பெய்ஜிங்கில் திங்கள்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.


  இருதரப்பு கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறிவிடக் கூடாது என்று இந்தியா சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. 


  பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஏற்கெனவே வூஹான் நகரில் பேச்சுவார்த்தை நடத்தியபோது எட்டப்பட்ட புரிந்துணர்வுப் பாதையில் இருந்து விலக வேண்டாம் என்றும் இந்தியா வலியுறுத்தியது. மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். அப்போது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம் என்று வாங் யி கூறினார்.
  மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. 
  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியின் சீனப் பயணத்துக்கு சில தினங்களுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடும் பாகிஸ்தானின் திட்டத்துக்கு சீனாவிடம் ஆதரவு கோரவே குரேஷி, அங்கு சென்றிருந்தார்.
  இந்நிலையில், சீனத் தலைநகரான பெய்ஜிங்குக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் துணை அதிபர் வாங் கிஷானை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை அவர் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது இரு தரப்புப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
  ஜெய்சங்கரை வரவேற்று வாங் யி பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து குறிப்பிட்டார். எனினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை இந்தியா நீக்கியது குறித்து அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. வாங் யி கூறியதாவது:
  பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் நாம் பரஸ்பரம் பயன்தரக் கூடிய ஒத்துழைப்பைக் கொண்டிருக்க முடியும். இது இரு நாட்டு மக்களின் நீண்ட கால நலன்கள் தொடர்புடையது. மேலும் இந்த ஒத்துழைப்பு மூலம் உலக அமைதிக்கும் மனிதகுல மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியும்.
  அதேவேளையில் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கியப் பொறுப்புகள் உள்ளன.
   இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பான நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம் என்று வாங் யி தெரிவித்தார்.
  அவரைத் தொடர்ந்து ஜெய்சங்கர் பேசியதாவது:
  சீன துணை அதிபர் வாங் கிஷானுடன் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். இந்திய - சீன உறவுகளின் எதிர்காலம் என்பது ஒரு தரப்பின் கவலைகள் தொடர்பாக மற்றொரு தரப்பு அக்கறை கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது.
  உலக அரசியலில் இந்திய-சீன உறவுகளுக்கு மிக முக்கிய இடம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் இரு நாட்டுத் தலைவர்களும் (மோடி-ஷி ஜின்பிங்) சந்தித்தபோது, எதார்த்த நிலையை அங்கீகரித்ததோடு, உலகில் நிலையற்ற தன்மை நிலவும் இந்த நேரத்தில் இந்திய-சீன உறவு என்பது நிலைத் தன்மைக்கான காரணிகளாக இருக்க வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டனர். அந்தப் புரிந்துணர்வு உறுதிப்படுத்துவதற்கு, நம்மிடையே ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை பிரச்னைகளாக உருவெடுக்கக் கூடாது என்பது முக்கியம்.
  கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களிடையே ஆக்கபூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது திருப்தியளிக்கிறது. இருதரப்பு உறவுகளில் அதன் தாக்கத்தை நாம் கண்டோம். வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் எனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் சீனா வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
  வெளியுறவுச் செயலாளராக இருந்து அத்துறையின் அமைச்சராகியுள்ள முதல் நபரான ஜெய்சங்கர், சீனாவுக்கான இந்தியத் தூதராக கடந்த 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார்.
  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்காலாம் விவகாரம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே கலாசாரப் பரிமாற்றம், சுகாதாரம், விளையாட்டு, அருங்காட்சியக மேலாண்மை ஆகிய துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  இரு நாடுகளும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பாகவும் கலாசார நிகழ்வுகளை நடத்துவது,  தொல்பொருள் தொடர்புடைய பாரம்பரிய இடங்களின் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைத்துச் செய்பட முடிவு செய்துள்ளன.
  அதேபோல், இந்தியாவும் சீனாவும் பாரம்பரிய மருத்துவ முறையில் நிபுணத்துவத்தைப் பெற்றிருப்பதால் இத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ள இருநாட்டு அமைச்சர்களும் தீர்மானித்துள்ளனர்.
  இரு நாட்டு தேசிய விளையாட்டு அமைப்புகளிடையே பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன. 
  மேலும், சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஹியூபே மாகாண அருங்காட்சியகமும் தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகமும் இணைந்து பல்வேறு கண்காட்சிகளை நடத்தவும், அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறுகையில் கைலாஷ்- மானசரோவர் யாத்திரையை விரிவுபடுத்துவது குறித்து சீனத் தரப்பு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவற்றை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்து வரும் மாதங்களில் அருங்காட்சியக மேலாண்மை, கல்வி, சிந்தனை அமைப்புகள், திரைப்படங்கள், ஒலிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக இருதரப்பும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. இது நமது கலாசாரம் மற்றும் மக்களிடையிலான பரிமாற்றங்களைப் பிரதிபலிப்பதாக அமையும். மக்களிடையிலான உறவுகளை வலுப்படுத்த 100 நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai