சுடச்சுட

    

    தில்லி - லாகூர் பேருந்து சேவை ரத்து: இந்தியா நடவடிக்கை

    By DIN  |   Published on : 13th August 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bus

    தில்லி-லாகூர் டிடிசி பேருந்து (கோப்புப் படம்)


    தில்லி-லாகூர் இடையிலான பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
    தில்லியிலிருந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு லாகூர் செல்லும் பேருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பேருந்து புறப்படவில்லை. மாறாக, பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக டிடிசி அதிகாரிகள் தெரிவித்தனர். 
    தில்லிக்கும், லாகூருக்கும் இடையே நட்பு அடிப்படையிலான பேருந்து சேவை, கடந்த 1999, பிப்ரவரியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. 2001-இல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தப் பேருந்து சேவை  நிறுத்தப்பட்டது. பின்னர், 2003, ஜூலையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
    கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், பாலாகோட் துல்லிய தாக்குதல் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, தில்லி-லாகூர் பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, பேருந்து சேவை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 
    தில்லியிலிருந்து லாகூருக்கு டிடிசி பேருந்துகள் ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களிலும், 
    பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (பிடிடிசி) பேருந்துகள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களிலும் சென்று வந்தன. இது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான  மூன்றாவது எல்லை தாண்டிய இணைப்புப் பேருந்து சேவையாக இருந்தது.
    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு - காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப்  பிரித்தும் மத்திய அரசு  கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடான தூதரக உறவை அந்த நாடு முறித்துக் கொண்டுள்ளது.
    தில்லி-லாகூர் நட்புப் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவும் இந்தப் பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது.
    கடைசியாக கடந்த சனிக்கிழமை தில்லியிலிருந்து 2 பயணிகளுடன் லாகூருக்கு டிடிசி பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதன் மறுமார்க்கத்தில் லாகூரிலிருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட  டிடிசி பேருந்து அன்று மாலை தில்லி வந்தடைந்தது.
    கடந்த மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் இந்தப் பேருந்து சேவையில் தங்களுக்கு ரூ.7.81 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக டிடிசி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai