நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது காகிதத்தை வீசிய பெண்: அமைச்சர் என்ன செய்தார் பாருங்கள்! (விடியோ)

வெள்ளத்தால் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், புதிய வீட்டைக் கட்டித்தருமாறு கைப்பட எழுதிய மனுவை நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது ஒரு பெண் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது காகிதத்தை வீசிய பெண்: அமைச்சர் என்ன செய்தார் பாருங்கள்! (விடியோ)


வெள்ளத்தால் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், புதிய வீட்டைக் கட்டித்தருமாறு கைப்பட எழுதிய மனுவை நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது ஒரு பெண் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுசெய்தார்.

பெலகாவி அருகே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே நின்றிருந்த பெண் ஒருவர், தன் கையில் இருந்த கோரிக்கை மனுவை அவரிடம் அளிக்க முடியாத விரக்தியில், கார் மீது வீசி எறிந்தார்.

இதைப் பார்த்த நிர்மலா சீதாராமன், காரை நிறுத்தச் சொல்லி, மீண்டும் அப்பெண் இருக்கும் இடத்துக்கு காரை திருப்பினார், அங்கே நின்றிருந்த அப்பெண்ணை அழைத்து, அவரிடம் கோரிக்கைகளைக் கேட்டார். அதற்கு அப்பெண், வெள்ளத்தில் தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். உடனடியாக மூத்த அதிகாரியை அழைத்து, அப்பெண் வீசி எறிந்த மனுவை, அப்பெண்ணின் கையில் கொடுத்து உரிய அதிகாரியிடம் நேரில் கொடுக்கச் செய்தார். உடனடியாக வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அப்பெண்ணுக்கு உறுதி அளித்தார்.

இந்த சம்பவத்தால், அதிருப்தியில் இருந்த பெண் மட்டுமல்லாமல், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் மத்திய அமைச்சரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தனர்.

வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி, பாகல்கோட், யாதகிரி, விஜயபுரா, ராய்ச்சூரு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெலகாவி நகருக்கு விமானம் மூலம் வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் சாலையில் பயணித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குறைகளையும் கேட்டறிந்தார். அதன்பிறகு பெலகாவி மாநகராட்சி அமைத்துள்ள மறுவாழ்வு மையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். அங்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். வீடுகளை இழந்தோருக்கு வெகுவிரைவில் வீடுகட்டித் தரப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

அதன்பிறகு, அங்கிருந்து பாகல்கோட் சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் புது தில்லி திரும்பினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி, எம்.எல்.ஏ.க்கள் அபய்பாட்டீல், அணில்பெனாகே, மாவட்ட பொறுப்புச் செயலாளர் ராகேஷ்சிங், மாவட்ட ஆட்சியர் பொம்மனஹள்ளி, மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரி கே.வி.ராஜேந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com