வன்முறை என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானவை: ஜம்மு-காஷ்மீர் திட்டக்குழு தலைமைச் செயலர்

ஆக.10 முதல், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும், கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டன. 
வன்முறை என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானவை: ஜம்மு-காஷ்மீர் திட்டக்குழு தலைமைச் செயலர்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த ஆக.5 முதல் நடைமுறையில் இருந்த தடை உத்தரவை ரத்து செய்யப்பட்டு ஆக.10 முதல், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும், கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மசூதிகளில் மக்கள் அமைதியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர். போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மாநிலத்தின் சில இடங்களில் மட்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதைத் தவிர்த்து பார்த்தால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் அமைதி நீடிக்கிறது.

ரேஷன் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கும்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வீடுகள்தோறும் விற்பனை செய்வதற்கு சிறியரக வாகனங்களை ஏற்பாடு செய்யுமாறு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் திட்டக்குழு தலைமைச் செயலர் ரோஹித் கன்சால் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது. எங்கும் அதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனவே அந்த ஊடகச் செய்திகளை நான் அடியோடு மறுக்கிறேன். 

மக்களுடன், மதத் தலைவர்களுடனும் மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முழு அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் பக்ரீத் கொண்டாடப்பட்டது. பாதுகாப்புப் படையினரால் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com