அயோத்தி வழக்கு: தொடர்ந்து 5-ஆவது நாளாக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், தொடர்ந்து 5-ஆவது நாளாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்துகிறது.
அயோத்தி வழக்கு: தொடர்ந்து 5-ஆவது நாளாக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை


அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், தொடர்ந்து 5-ஆவது நாளாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்துகிறது. இதில், ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு தனது வாதத்தைத் தெரிவிக்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதி தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி, தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 
விசாரணையின்போது, அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?, ராமர் பிறந்த இடத்தை மனுதாரராக எவ்வாறு சேர்க்க முடியும்?, ராமரின் வம்சாவளியினர் அயோத்தியில் இன்னமும் வசித்து வருகிறார்களா? முதலான கேள்விக்கணைகளை நீதிபதிகள் தொடுத்தனர். 
இவற்றுக்கு ராம் லல்லா விராஜ்மான் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே. பராசரன் லாவகமாக பதிலளித்தார். அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு பக்தர்களின் நம்பிக்கையே ஆதாரம், ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, ஓர் இடத்தை வழிபாடு செய்வதற்கான புனித இடமாகக் கருதுவதற்கு, அங்கு கடவுளரின் சிலைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நதிகள், சூரியன் ஆகியவற்றையும் ஹிந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதனடிப்படையில், ராமர் பிறந்த இடத்தையும் ஒரு மனுதாரராகக் கருத முடியும் என்று நீதிமன்றத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கிடையே, வாரத்தின் அனைத்து நாள்களிலும் விசாரணை நடைபெற்றால், அதற்கு ஒத்துழைப்பது சிரமமாக இருக்கும். வழக்கின் விசாரணையை அவசரகதியில் நடத்தக் கூடாது என்று சன்னி வக்ஃபு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவண் கோரிக்கை விடுத்திருந்தார். இதை நிராகரித்த நீதிபதிகள், தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிக்கைக்கான விடுமுறையைத் தொடர்ந்து வழக்கின் 5-ஆவது நாள் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com