சுடச்சுட

    

    அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளனவா?: உச்சநீதிமன்றம் கேள்வி

    By DIN  |   Published on : 14th August 2019 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme1


    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா? என்று ராம் லல்லா விராஜ்மான் அமைப்பிடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
    உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் 5-ஆவது நாள் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அயோத்தியில் மசூதி கட்டப்பட்ட இடத்தில், ராமர் கோயில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 


    இதையடுத்து, ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிட்டதாவது:
    அயோத்தியில் மசூதி கட்டப்படுவதற்கு முன், அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பதை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் உறுதிசெய்துள்ளனர். ராமர் கோயிலின் இடிபாடுகளுக்கு மேல்தான் மசூதி கட்டப்பட்டது என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.யு. கான் கூறியுள்ளார். ஹிந்து மக்களைப் பொருத்தவரையில், ஓர் இடத்தைப் புனிதமாகக் கருத, அந்த இடத்தில் கடவுளரின் சிலை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; ஹிந்துக்களின் நம்பிக்கை ஒன்றே போதுமானது. அயோத்தியிலுள்ள ராமஜென்மபூமியில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதாக இடைக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், அயோத்தியில் மசூதிக்கு வெளிப்புறத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளது உறுதியாகிறது.


    ஆதாரங்கள் எதுவுமில்லை: அதே வேளையில், இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட மசூதியானது, ஹிந்துக்களின் வழிபாட்டுக்குத் தடையாக இருக்கவில்லை. அயோத்தியிலிருந்த மசூதியை முகலாயப் பேரரசர் பாபர் தான் எழுப்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த மசூதியில் கடந்த 438 ஆண்டுகளாகத் தொழுகை நடத்தி வருவதாக சன்னி வக்ஃபு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். 
    1856-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அயோத்தியில் மசூதி மட்டுமே இருந்ததாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. மேலும், 1855-ஆம் ஆண்டு முதல் 1934-ஆம் ஆண்டு வரை அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றதற்கான சாட்சியங்களும் இல்லை. எனவே, அந்த இடத்துக்கு முஸ்லிம் பிரிவினர் உரிமை கோர முடியாது. ஆனால், அந்த இடத்தில் ஹிந்துக்கள் பல நூறு ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகின்றனர் என்றார் சி.எஸ். வைத்தியநாதன்.
    ராம் லல்லா விராஜ்மான் தரப்பு சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் கே. பராசரன் கூறுகையில், இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
    அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதி தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி, தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai