சுடச்சுட

  

  காஷ்மீர் குறித்த கருத்துகள் காங்கிரஸின் திசையறியா அரசியலைக் காட்டுகிறது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

  By DIN  |   Published on : 14th August 2019 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prakash

  கோப்புப் படம்


  ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருவது அக்கட்சியின் திசையறியா அரசியலைக் காட்டுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அக்கட்சியின் மூத்த தலைவர்களான கரண் சிங், ஜனார்த்தன் துவிவேதி ஆகியோரும், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரவிக்கவில்லை. அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் அதற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.  ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் இருந்திருந்தால்   பாஜக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்திருக்காது என்று கூறியிருந்தார். இது வன்முறையைத் தூண்டக்கூடிய மற்றும் பொறுப்பற்ற கருத்து என்று பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறி வருகின்றனர். இது அக்கட்சியின் விரக்தியையும், திசை தெரியாத அரசியலையும் காட்டுகிறது. காங்கிரஸைச் சேர்ந்த கரண் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, மிலிந்த் தேவ்ரா, ஆர்.பி.என்.சிங் உள்ளிட்டோர் ஒரு கருத்தைக் கூறுகின்றனர். சிதம்பரம், மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் அதற்கு நேர்மாறாகப் பேசுகின்றனர். அந்தக் கட்சி மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளது. அவர்களுக்கு எப்போதுமே தெளிவான நிலைப்பாடு இருந்ததில்லை.
  370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் மக்கள் இனி முன்னேற்றமடைவார்கள். தங்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை இனி அவர்கள் பெறுவார்கள். அதனால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 370ஆவது பிரிவு நீக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் ஏற்படும் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய விதம் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டுகிறது.
  அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பும். ஆனால் காஷ்மீரில் யாராவது பாலஸ்தீனத்தைக் கண்டால் அது அவர்களின் எதிர்மறைச் சிந்தனையாகும்.
  இந்த விவகாரத்தில் மதவெறியைத் தூண்ட சிதம்பரம் முயற்சிக்கிறார். இது மலிவான அரசியல்.
  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகும். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அப்பகுதிக்கு என்று ஓர் இருக்கை ஒதுக்கப்படும் என்று ஜாவடேகர் தெரிவித்தார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai