சுடச்சுட

  

  காஷ்மீர் விவகாரம்: ஐ.நா., முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவது கடினமாக உள்ளது: பாக். வெளியுறவுத் துறை அமைச்சர்

  By DIN  |   Published on : 14th August 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா மேற்கொண்ட முடிவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவது எளிதானதல்ல என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை பிரித்து, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்குவதற்கும் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
  இந்தியாவின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்த முடிவை எதிர்த்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தது. எனினும், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உலக நாடுகளுக்கு தெரிவித்த இந்தியா, எதார்த்த நிலையை ஏற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானை  அறிவுறுத்தியது.
  இந்தியாவின் இந்த முடிவுக்கு ரஷியா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா நடுநிலையுடன் செயல்பட விரும்புவதாக தெரிவித்தது. பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியான சீனா, காஷ்மீர் விவகாரத்தை இந்தியா- பாகிஸ்தான் தங்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.
  அதையடுத்து, மேற்கண்டவாறு குரேஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு எதிராக ஐ.நா.வின் ஆதரவை பெறுவது கடினமாக உள்ளது. ஐ.நா.வில்  நம்மை யாரும் வரவேற்கவுமில்லை; நமக்காக காத்திருக்கவுமில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆதரவைப் பெறுவதற்கு பாகிஸ்தானியர்கள் புதிய போராட்டத்தை தொடங்க வேண்டியுள்ளது. முட்டாள்களின் சொர்க்கத்தில் மக்கள் வாழக்கூடாது. 
  இந்த விவகாரத்தில் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. உலக நாடுகளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பல நாடுகள் மற்றும்  ஏராளமான மக்கள் முதலீடு செய்துள்ளனர்.  
  இந்தியாவிடம் இருந்து பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெறுவதால், முஸ்லிம்களை காக்க வேண்டிய நாடுகள் கூட இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai