சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது? முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல் பேட்டி

    By DIN  |   Published on : 14th August 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rohit-Kansal


    ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தின ஒத்திகைக்கு முன் கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு கெடுபிடிகளும் மேலும் தளர்த்தப்படும் என்று நம்புவதாக அந்த மாநில அரசின் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார்.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சானத்தின் 370ஆவது பிரிவை  மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

    இந்நிலையில், மாநில அரசின் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
    காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. எனினும், காஷ்மீரின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
    ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் லடாக்கில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டதும், கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு கெடுபிடிகளும் மேலும் தளர்த்தப்படும் என்று நம்புகிறோம். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடத்தப்படும் என்று அரசு நிர்வாகம்  நம்பிக்கை கொண்டுள்ளது.
    மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை அரசு நிர்வாகம் பின்பற்றி வருகிறது. கடந்த திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டம் அமைதியாக நடைபெற்றது.
    மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதையும் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு வசதிகளைக் பொறுத்தவரை உள்ளூர் மக்களுக்காக 300 பொது தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து  அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களிடம் பேசலாம். தற்போது ஒருநாளைக்கு 5,000 தொலைபேசி அழைப்புகள் செய்யப்படுகின்றன.
    மாநிலத்தில் மருத்துவச் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகள் உண்மையானதல்ல. மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் அளிப்பதோடு அறுவைசிகிச்சைகளும் நடத்தப்படுகின்றன. மாநிலத்தில் வழக்கமான மற்றும் அவசரக்கால மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளன.
    ஸ்ரீநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் மருத்துவமனைகளில் 13,500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 1,400 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 600 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
    தேசிய நெடுஞ்சாலை வழக்கம் போல் இயங்குகிறது. கடந்த 24 மணிநேரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல்-டீசல் ஆகியவற்றைக் கொண்டுவரும் 100 கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும், 1,500 இலகு ராக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவையும் இயங்கியுள்ளன. விமானச் சேவைகளும் வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டன.
    டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரசாரங்களை கவனித்து அவற்றை முறியடிக்க உரிய நவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai