சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

  By DIN  |   Published on : 14th August 2019 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supremecourt


  ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கக் கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது.
  வழக்கமான தொழுகைக்காகக் கடந்த வெள்ளிக்கிழமையும், பக்ரீத் பண்டிகை தொழுகைக்காகக் கடந்த திங்கள்கிழமையும் கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், தடைகளையும் நீக்கக் கோரியும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தொலைபேசி மற்றும் இணையதள சேவைகளின் முடக்கத்தை நீக்கக் கோரியும் காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பதிலளித்ததாவது:

  சில நாள்கள் ஆகும்: ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது அவசியமாகும். தினசரி அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறோம்.   
  கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பயங்கரவாதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அதன் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்தனர். அந்தச் சூழலில், இயல்புநிலைக்குக் கொண்டுவரவே 3 மாதகாலம் தேவைப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் தவறான வழிநடத்துதல்கள் காரணமாக, கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 44,000 பேர் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்துள்ளனர்.
  தற்போது ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு இயல்புநிலை திரும்ப இன்னும் சில நாள்கள் ஆகும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து, மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றார் கே.கே. வேணுகோபால்.

  காலஅவகாசம் அவசியம்: இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மேனகா குருசுவாமி வாதிடுகையில், மக்களுக்கான சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில்கூட மக்களால் மற்றவர்களுடன் பேசமுடியாத சூழல் ஏற்பட்டது என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
  ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவி வரும் பிரச்னை, மிகவும் உணர்வுப்பூர்வமானது. அதற்கு ஒரே நாளில் தீர்வு கண்டுவிட முடியாது. அங்கு இயல்புநிலை திரும்ப, மத்திய அரசுக்கு சிறிது காலஅவகாசம் தரப்பட வேண்டியது அவசியம். தினசரி அடிப்படையில் அவர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது. 
  அங்கு பிரச்னைகள் ஏதேனும் நிகழ்ந்து விட்டால், யார் பொறுப்பேற்பது? அச்சூழலில், மத்திய அரசுதான் பதில்கூறும் நிலைக்குத் தள்ளப்படும். தற்போதைய நிலையில், இந்த மனு மீது எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்குரிய சுதந்திரம் கிடைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். ஆனால், அங்கு இயல்புநிலையும் திரும்ப வேண்டும். 2 வாரங்கள் கழித்து இந்த மனுவை விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai