கேரளம்: 3 மாவட்டங்களில் அதிதீவிர மழை எச்சரிக்கை: பலி எண்ணிக்கை 91-ஆக உயர்வு

அண்டை மாநிலமான கேரளத்தின் மத்திய பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களில் அதிதீவிரமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரள மாநிலம், மேப்பாடி பகுதியில் வெள்ள நிவாரண முகாமில் உள்ளவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் பினராயி விஜயன்.
கேரள மாநிலம், மேப்பாடி பகுதியில் வெள்ள நிவாரண முகாமில் உள்ளவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் பினராயி விஜயன்.

அண்டை மாநிலமான கேரளத்தின் மத்திய பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களில் அதிதீவிரமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டது. எனினும், ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
கேரளத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிகப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, மழை, வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்தது. மாநிலம் முழுவதும் இன்னும் 40 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களில் தற்போது மழை குறைந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகிறது. அங்கு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டது. மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.சந்தோஷ் கூறுகையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 2.52 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,332 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த மாவட்டங்களில் 41 பேர் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துவிட்டனர். வயநாடு மாவட்டத்தில் உல்ள மெப்பாடி பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் சந்தித்துப் பேசினார். 
முதல்வருடன் மாநில வருவாய்த்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இதேபோல் மலப்புரம் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்தித்துப் பேசினார்.
மலப்புரம் மாவட்டத்தில் கவளப்பாறை மற்றும் கோட்டைக்குன்னு பகுதிகளில் அண்மையில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 32 பேரைக் காணவில்லை.
இறந்தவர்களின் உடல்களைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 185 முகாம்களில் 45,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்து விட்டனர். 7 பேரைக் காணவில்லை. இந்த மாவட்டத்தில் புத்துமலை பகுதியில் அண்மையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 196 முகாம்களில் 35,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு 808 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. 8,459 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன. எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வயநாட்டில் இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை சாதனம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
 கேரள மாநிலம், வயநாட்டில் இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை சாதனத்தை நிறுவக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால், அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து சேதப் பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வயநாட்டில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு, நீண்ட காலத் திட்டத்தை உருவாக்கவும், சிறப்பு நிதி மூலம் உதவி செய்யவும் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வயநாட்டில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களில்,  முன்னெச்சரிக்கை சாதனங்களை முன்கூட்டியே நிறுவியிருந்தால், ஏராளமானோரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.
கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களிலும் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதும், நீர்வழித்தடங்கள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் போக்குவரத்து குறைந்து வருவதும், விவசாயத்துக்கும், அந்த மாநிலங்களில் வாழும் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குதத்தொடர்ச்சி மலையில் சுரங்கம், கல்குவாரிகள் தொடர்ந்து செயல்படுகின்றன. வனப்பரப்பு குறைந்து வருவது, வன உயிரினங்களுக்கும், மக்களுக்கும் இடையே வாழ்வாதாரத்துக்கான மோதலை அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் எளிதில் பாதிக்கப்படும் இடத்தில் வயநாடு அமைந்துள்ளது என்று அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com