மகாராஷ்டிரம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,000 பேர் மீட்பு

மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,000 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.


மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,000 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
வர்ஷா ராஹத் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ் இந்த மூன்று மாநிலங்களிலும் கடற்படையின் 41 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இக்குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் இலகு ரக ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவை மூலம் சென்றடைந்தனர்.
இது குறித்து கோவா பகுதிக்கான கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ஃபிலிப்போஸ் பைனுமூட்டில் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை மூலம் மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் 11,124 பேரும், கர்நாடகத்தில் 3,115 பேரும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர். கர்நாடகத்தில் 1,305 கிலோ நிவாரணப் பொருள்களையும், மகாராஷ்டிரத்தில் 1,890 கிலோ நிவாரணப் பொருள்களையும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன. 
சுமார் 5,000 பேருக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
மீட்புப் பணி முடிந்தது: மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய இரு மாவட்டங்களிலும் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாவும் அவர்கள் தெரிவித்தனர். மாநிலத்தில் கடந்த 9 நாள்களில் மழை வெள்ளத்துக்கு 43 பேர் பலியாகினர்.
அதேபோல் வெள்ளச் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணி முடிந்ததும் அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ரூ.6,813 கோடி நிதி தேவை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்துக்கு நிவாரண நிதியாக ரூ.68,13 கோடியை வழங்குமாறு மத்திய அரசிடம் கோர உள்ளதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் இதற்கான கோரிக்கை இரு பிரிவுகளாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன்படி கோலாப்பூர், சாங்லி, சதாரா மாவட்டங்களுக்காக ரூ.4,708 கோடியும், மகாராஷ்டிரத்தின் மற்ற பகுதிகள், கொங்கண், நாசிக் ஆகிய பகுதிகளுக்காக ரூ.2,105 கோடியும் வழங்குமாறு கோரப்படும். இது தொடர்பான மனு அனுப்பப்படும் வரை மாநில தொகுப்பு நிதியில் இருந்து நிதியைச் செலவிட மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
வெள்ள நிவாரண நிதிக்கு  தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் ஃபட்னவீஸும், அவரது அமைச்சர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com