சுடச்சுட

  

  ஆர்பிஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம்: பிமல் ஜலான் குழு பரிந்துரை

  By DIN  |   Published on : 15th August 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bimal-jalan-2


  இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வசம் உள்ள உபரி நிதியை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறு சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம் என பிமல் ஜலான் குழு பரிந்துரைத்துள்ளது.
  ஆர்பிஐ வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றின் மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் உபரி நிதியில் 14 சதவீதத்தை கைவசம் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை அந்நாட்டு அரசிடம் பகிர்ந்தளித்து வருகின்றன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.
  இதைச் சுட்டிக்காட்டி, கூடுதல் உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது. ஆனால், அந்த நிதியைத் தர ரிசர்வ் வங்கி மறுத்த நிலையில், அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. 
  இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அமைக்கப்பட்டது. 
  இக்குழுவில் ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார், ஆர்பிஐ துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன், ஆர்பிஐ மத்திய வாரிய உறுப்பினர்கள் பாரத் தோஷி, சுதீர் மன்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது குறித்தான அறிக்கையைத் தாக்கல் செய்ய அக்குழுவுக்கு 90 நாள்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது பின்னர் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. 
  இந்நிலையில், அந்தக் குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, அதிகாரி ஒருவர் கூறுகையில், உபரி நிதி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் குழு ஆலோசித்துவிட்டது. இறுதி அறிக்கையும் தயார் செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசுக்கு எவ்வளவு உபரி நிதி அளிக்கப்பட வேண்டும் என்பதையோ அல்லது அதன் கணக்கீட்டையோ தற்போது கூற இயலாது. தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருவதைப் போல் தவணை முறையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மத்திய அரசுக்கு உபரி நிதியை வழங்க குழு பரிந்துரைத்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஆர்பிஐயிடம் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றார்.
  ஆர்பிஐ வழங்கும் உபரி நிதி மூலம் மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும். நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai