சுடச்சுட

  


  அண்டை மாநிலமான கேரளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில், மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது. 
  கேரளத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இடையில் கடந்த இரு தினங்களாக சில மாவட்டங்களில் மழை குறைந்தது. 
  இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல்  பலத்த மழை  பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளத்தின் மத்திய மாவட்டமான பத்தணம்திட்டாவில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் அரசு நிர்வாகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில் மோசமான வானிலை நிலவும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
  மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில்தான் கடந்த வாரம் நிலச்சரிவுகளும் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டன.
  திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்ஞம் அருகே சில மீனவர்கள் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒரு மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 3 மீனவர்களை மீட்புப்படையினர் மீட்டனர். 
  பலத்த மழை எச்சரிக்கையைக் கருதி, 11 மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் புதன்கிழமை விடுமுறை அறிவித்தன.
  இதனிடையே, முதல்வர் பினராயி விஜயன் மாநில வெள்ள நிலைமை குறித்து தன அமைச்சரவை சகாக்களுடன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 
  அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அரசு முயற்சித்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் உடனடி உதவியாக ரூ.10,000 வழங்கப்படும். வீடுகளையும், நிலங்களையும் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என்றார் அவர்.
  கேரள அரசு புதன்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி, மாநிலத்தில் இதுவரை மழை, வெள்ள பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 35 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 12 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மாவட்டங்களில்தான் மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
  வெள்ளத்தால் பாதிகப்பட்ட 1.89 லட்சம் பேர் மீட்கப்பட்டு 1,118 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புக்கு மாநிலம் முழுவதும் 1,057 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டன. 11,159 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளன.
  நிலச்சரிவு ஏற்பட்ட கவளப்பாறை பகுதியில் மண்ணில் யாராவது புதைந்துள்ளார்களா என்று தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காலையில் மழை பெய்ததால் இப்பணி சற்று நேரம் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  வயநாடு மாவட்டத்தின் புத்துமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேடுதல் பணியில் 13 பொக்லைன் இயந்திரங்களும், 500 மீட்புப்படை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி யூ.வி.ஜோஸ் தெரிவித்தனர். அங்கு 15 அடி அளவுக்கு களிமண்ணும், சேறும் நிறைந்து காணப்படுவதாகவும், தேடுதல் பணியில்  மோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai