சுடச்சுட

  

  செய்தியாளரை மிரட்டியதாக பிரியங்கா உதவியாளர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 15th August 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உத்தரப் பிரதேச மாநிலத்தில், செய்தியாளரை மிரட்டி தாக்கியதாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வதேராவின் உதவியாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
  வாராணசியைச் சேர்ந்த நிதிஷ் குமார் பாண்டே என்ற செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  முன்னதாக, இச்சம்பவம் தொடர்பான காணொலிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வந்தது. 
  உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த மாதம் நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தினரை சந்திக்க அம்பா கிராமத்துக்கு பிரியங்கா வதேரா செவ்வாய்க்கிழமை வந்தார். 
  அப்போது செய்தியாளர் ஒருவர் பிரியங்காவிடம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து அந்த செய்தியாளர் பின்னால் தள்ளப்பட்டார். 
  இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த செய்தியாளர் பாஜகவுக்கு ஆதரவானவர் என்றும், அக்கட்சிக்கு சாதகமாக கேள்வி அவர் எழுப்புவதாகவும் பிரியங்காவின் உதவியாளர் குற்றம்சாட்டினார். 
  இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நிதிஷ் குமார் பாண்டே என்ற அந்த பத்திரிகையாளர், பிரியங்காவின் தனிச் செயலரான சந்தீப் சிங் தன்னை மிரட்டி, தாக்கியதுடன், தனது கேமராவையும் தள்ளிவிட முயன்றதாக காவல்துறையில் புகாரளித்தார். 
  அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோராவால் காவல் நிலைய பொறுப்பாளர் சி.பி. பாண்டே தெரிவித்தார். 
  இந்நிலையில், இந்த காணொலியை குறிப்பிட்டு சுட்டுரையில் பதிவிட்ட உத்தரப் பிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகரான மிர்துஞ்ஜெய் குமார், ஏழைகளின் கண்ணீரை துடைப்பது போல் நடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் பிரியங்கா. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசியவர்கள், பிரியங்காவின் செயலர் பத்திரிகையாளரிடம் முறைதவறி நடந்துகொண்டது தொடர்பாக ஏன் பேசவில்லை? பிரியங்காவே தனது செயலரை கண்டிக்கவில்லை. பத்திரிகையாளர்களை பாதுகாக்க உத்தரப் பிரதேச அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai